அவரைக்கூடி இன்புறும் வாழ்வு கிடைப்பதாக" என்று சொல்லி வருந்துகின்றாள். இதைக் கூறுவதன் மூலம் மறு பிறப்புக் கொள்கையை வலியுறுத்துகின்றார். அவர் முறைப்படி என்னை மணந்துகொள்ள வராவிட்டாலும் என்மனம் சமாதானம் அடையும்படி, இறந்தபின் செல்லும் மறு உலகத்திலாவது அவரோடு இணைபிரியாதிருக்கும் நன்மை கிடைக்கட்டும் என்று சொல்லிக் கண்கலங்கினாள்; சோர்வடைந்தாள்; தாங்கமுடியாத துன்பத்துடன் தேம்பி அழுதாள். ஆற்றின் வாரார் ஆயினும், ஆற்ற ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு என, மான் அமர் நோக்கம் கலங்கிக் கையற்று, ஆனாச் சிறுமையள், இவளும் தேம்பும் (23--26) இவ்வடிகளால் மேலே சொல்லிய கருத்தைக் காணலாம். பயமும் நாணமும் எவ்வளவு நாணமுடையவர்களும் பயம் வந்தபோது நாணத்தைத் துறந்துவிடுவார்கள். தம்முடைய உயிருக்கு ஆபத்து என்ற அச்சம் தோன்றியபோது எப்படியேனும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் எதையும் செய்வார்கள். இது இவ்வாசிரியர் கருத்து. இக்கருத்து உண்மையானது. இதை ஒரு நிகழ்ச்சியின் மூலம் விளக்கிக்காட்டுகிறார். தலைவியும் அவளுடைய தோழிகளும் நின்றுகொண்டிருக்கின்றனர். எதிரில் ஓர் இளைஞன். அவன் அவர்களிடம் ஏதோ கேட்கின்றான். அவர்கள் நாணத்தால் பேசாமல் ஒதுங்கி நிற்கின்றனர். இச்சமயத்தில் ஓர் யானை மூர்க்கத்தனமுடன் அப்பெண்களை நோக்கி ஓடி வருகின்றது. உடனே |