| 160 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
அவர்கள் அஞ்சி நடுங்கி நாணத்தை மறந்து அந்த ஆடவனிடம் ஓடி வந்து நெருங்கி நின்றனர். இவ்வாறு சொல்லி "பயத்தால் நாணம் பறந்து விடும்" என்ற உண்மையைக் காட்டுகின்றார். மதங்கொண்ட யானை ஒன்று. மழைக்காலத்து இடியைப்போல் பிளிறிற்று. பெரிய கையை நிலத்திலே மோதிக் கோபத்தைக் காட்டிற்று. மதச் செருக்குடன் மரங்களைப் பெயர்த்தது. கூற்றுவனைப்போல எங்களை நோக்கி ஓடிவந்தது. நாங்கள் தப்பிப்போக வழியறியாமல் திடீரென்று எங்கள் கைவளையல்கள் ஒலிக்கும்படி, நாணத்தையும் மறந்து நடுநடுங்கும் நெஞ்சத்துடன் விரைந்து ஓடினோம். அந்தக் கட்டிளைஞனிடம் சேர்ந்தோம். அச்சமுற்ற மயிலைப்போல் நடுங்கி நின்றோம். கார்ப்பெயல் உருமில் பிளிறிச், சீர்த்தக இரும்பிணர்த் தடக்கை யிருநிலம் சேர்த்திச் சினந்திகழ் கடாஅம், செருக்கி மரம்கொல்பு, மையல் வேழம் மடங்கலின் எதிர்தர, உய்விடம் அறியேமாகி, ஒய்யெனத் திருந்துகோல் எல்வளை தெழிப்ப, நாணுமறந்து, விதுப்புறு மனத்தேம், விரைந்தவன் பொருந்திச் சூர் உறுமஞ்ஞையின் நடுங்க (162--169) இவ்வடிகளால் மேலே சொல்லிய உண்மையைக் காணலாம். புலமைத்திறம் இயற்கைப் பொருள்களையும், இயற்கை நிகழ்ச்சிகளையும் அப்படியே படம்போல் எழுதிக்காட்டுவதில் இவ்வாசிரியர் வல்லவர். இவர் காட்டியிருக்கும் இயற்கை நிகழ்ச்சிகளை வைத்து பல படங்கள் தீட்டலாம். |