| 162 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
பசுக்கூட்டம் கன்றுகளை அழைக்கும் குரலை உடையனவாய் அவைகள் தங்கும் மன்றுகளிலே நிறையப் புகுந்தன. ஏங்கு வயிர் இசைய கொடுவாய் அன்றில் ஓங்கு இரும்பெண்ணை அகமடல் அகவ ஒலிக்கின்ற கொம்பு போன்ற வளைந்த வாயையுடைய அன்றிற் பறவை, உயர்ந்த பெரிய பனை மரத்தின் பெரிய மடலுக்குள் இருந்துகொண்டு தன் பெடையை அழைத்தது. பாம்பு மணி உமிழ பாம்புகள் தம்மிடத்தே உள்ள இரத்தினத்தைக் கக்கி வைத்து அந்த வெளிச்சத்திலே இரை தேடின. பல்வயின் கோவலர் ஆம்பல் அம் தீங்குழல் தெள்விளி பயிற்ற பலவிடங்களிலும் இடையர்கள் ஆம்பல் என்னும் பண்ணை இனிய குழலிலே தெளிவாகக் கேட்கும்படி எழுப்பினர். ஆம்பல் ஆயிதழ் கூம்பு விட அல்லியின் அழகிய இதழ்கள் விரிந்தன; அதாவது அல்லிகள் மலர்ந்தன. வளமனைப் பூந்தொடிமகளிர் சுடர்தலைக் கொளுவி அந்தி அந்தணர் அயர செல்வம் நிறைந்த மனைகளிலே உள்ள வளையலை அணிந்த பெண்கள், விளக்கேற்றி மாலைக்கடன்களைச் செய்தனர். அந்தணர்களும் மாலைக்கடன்களை ஆற்றினர். இவைகள் 217 முதல் 223 வரையுள்ள அடிகள். இவ்வாறு மாலைக்கால நிகழ்ச்சியை எடுத்துக்காட்டியிருக்கிறார் இப்புலவர். |