பக்கம் எண் :

குறிஞ்சிப்பாட்டு163

இன்னும் சில செய்திகள்

இன்னும் பல அரிய செய்திகளையும் இந்நூலிலே காணலாம்.

கடவுள் ஒருவரே, அவரே பல உருவங்களுடன், பல தெய்வங்களாகக் காட்சி தருகின்றார்.

வேறு பல் உருவின் கடவுள்                           (6)

பண்டைக் காலத்தில் கழைக்கூத்தாடிகள் இருந்தனர். பெண்களும் கழைக்கூத்தாடுவதோடு, ஒரு மரத்திற்கும் மற்றொரு மரத்திற்குமாக இழுத்துக் கட்டப்பட்ட நீண்ட கயிற்றிலே நின்று ஆடுவார்கள். அவர்கள் ஆட்டத்திற்குத் தக்கவாறு வாத்தியங்கள் வாசிக்கப்படும்.

அரிக்கூட்டு இன்னியங்கறங்க ஆடுமகள்
கயிறு ஊர் பாணியில்                       (193--194)

இக்காலத்தில் அரிசியும், நெய்யும், மாமிசமும் கலந்து சமைப்பது போன்ற புலவுச்சோறு அக்காலத்திலும் சமைக்கப்பட்டது.

"பைந்நிணம் ஒழுகிய நெய்ம்மலி அடிசில்"           (204)

என்பதனால் இதை அறியலாம்.

தொண்ணூற்றொன்பது வகையான மலர்களின் பெயரை இவ்வாசிரியர் குறித்திருக்கின்றார். இவை காந்தட்பூ முதல் மலைஎருக்கு வரையில் உள்ள தொண்ணூற்றொன்பது மலர்கள். இவைகளி்ல் பல மலர்களை நாம் இக்காலத்தில் கண்டறிய முடியாது.

இத்தகைய பல செய்திகளையும், தமிழர்களின் பழக்க வழக்கங்களையும் இந்நூலிலே காணலாம்.