நிகழ்ச்சிகள்; வாணிகம்; கொடிகள்; வாழும் மக்கள்; செல்வச் சிறப்பு; மன்னன் கரிகாற்சோழனுடைய ஆண்மை, வீரம், கொடை, ஆட்சி இவைகளையெல்லாம் வரிசையாக எடுத்துக்காட்டியிருக்கின்றார். இதுவே இப்பாடலின் அமைப்பாகும் இம்முறையிலே பாடப்பட்ட இந்நூலை ஒரு சமயத்தில் கரிகால்வளவனிடம் காட்டியபோதுதான் அவன் புலவரைப் புகழ்ந்து பரிசளித்தான். காவிரியின் பெருமை காவிரி என்றும் வற்றாத ஜீவநதி. காவிரியாற்றால்தான் சோழ நாட்டிலே செல்வம் கொழித்திருக்கின்றது; கரும்பும் நெல்லும் கழனிகளிலே வளர்ந்திருக்கின்றன. இவ்வுண்மைகளை இந்நூல் எடுத்துக் காட்டுகின்றது. மழை வறண்ட காலத்திலும் காவிரியாற்றின் நீர் வற்றாது; அது மேற்குமலையிலே பிறந்து கிழக்குக் கடலோடு கலப்பது; தண்ணீரை வயல்களிலே நிரப்பிப் பொன்கொழிக்கச் செய்வது. வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய, கடற்காவிரி புனல்பரந்து பொன்கொழிக்கும் (5--7) சோழ நாட்டிலே என்றும் விளைந்து கொண்டிருக்கின்ற பரந்த வயல்கள் இருக்கின்றன. அங்கே கருப்பஞ்சாற்றைக் காய்ச்சும் கொட்டில்கள் பல இருக்கின்றன. அக்கொட்டில்களிலிருந்து வரும் தீப்புகையினால் பக்கத்து வயல்களிலே மலர்ந்திருக்கின்ற நெய்தற் பூக்கள் வனப்புக்கெட்டு வாடுகின்றன. |