| 168 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
விளைவுஅறா வியன் கழனிக் கார்க் கரும்பின் கமழ் ஆலைத், தீத்தெறுவில் கவின்வாடி நீர்ச்செருவின் நீள் நெய்தல் பூச்சாம்பும் புலத்து ஆங்கண் (8--12) இவற்றைக் கொண்டு சோழ நாட்டின் நீர் வளத்திற்கும் நில வளத்திற்கும் காரணம் காவிரியாறே என்பதைக் காணலாம். செல்வச் சிறப்பு சோழ நாட்டிலே செல்வக் குடியினர் பலர் சிறந்து வாழ்ந்தனர். அவர்கள் பெரிய வீடுகளிலே குடியிருந்தனர். அவர்களிடம் நெல்லும் பொன்னும் நிறைய இருந்தன. வறுமையறியாமல் வாழ்க்கை நடத்தி வந்தனர். இச்செய்தியை ஒரு நிகழ்ச்சியின் மூலம் எடுத்துக்காட்டுகிறார் இவ்வாசிரியர். பெரிய வீட்டின் அகலமான முற்றத்திலே நெல்லைக் காய வைத்திருந்தனர். அந்த நெல்லுக்கு இளம் பெண்கள் காவலாக இருந்தனர். அவர்களுடைய நெற்றி அழகானது; உள்ளமும் பார்வையும் கபடமற்றவை; நல்ல அணிகலன்களைப் பூண்டிருந்தனர்; காய்கின்ற நெல்லைக் கொத்த வரும் கோழிகளைத் தம் காதிலே தரித்திருக்கும் பொற்குழைகளைக் கழற்றி எறிந்து விரட்டினர்; அக்குழைகள் முற்றத்திலே சிதறிக் கிடக்கின்றன. பொன்னணியைக் காலிலே அணிந்த சிறுவர்கள் உருட்டிச் செல்லும் மூன்று சக்கரவண்டியை அவைகள் தடுக்கின்றன. அகனகர் வியன் முற்றத்துச், சுடர்நுதல் மட நோக்கின் நேர் இழைமகளிர், உணங்குஉணாக் கவரும் கோழி யெறிந்த கொடுங்கால் கனங்குழை, |