பொற்கால் புதல்வர் புரவியின்று உருட்டும் முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும் (20--25) இதனால் சோழ நாட்டிலே பல செல்வக் குடியினர் வாழ்ந்தனர் என்பதைக் காணலாம். அன்ன சாலைகள் இத்தகைய செல்வம் சிறந்த சோழ நாட்டிலே உணவின்றித் தவிக்கும் வறிஞர்களும் வாழ்ந்தனர். அந்த வறிஞர்களுக்குச் செல்வமுடையவர்கள் உணவளித்துக் காப்பாற்றி வந்தனர். பலர்க்கும் அன்னமிடும் அறக்கூழ்ச் சாலைகள் பல காவிரிப்பூம்பட்டினத்திலே இருந்தன. இவ்வுலகிலே புகழுடன் வாழ வேண்டும்; இறந்த பின் நற்கதியைப் பெறவேண்டும் என்று விரும்பிய செல்வர்கள் இந்த அறக்கூழ்ச்சாலைகளை நடத்தி வந்தார்கள். இவ்வுலகிலே புகழ் நிலைக்கக் கூடிய சொற்கள் பெருகவும், மறுமையிலே இன்புறுவதற்கான அறம் பெருகி நிலைக்கவும் எண்ணியவர்கள் பெரிய சமையல் வீடுகளிலே ஏராளமாகச் சோற்றையாக்கினர். வந்தோர்க்கெல்லாம் அள்ளி வழங்குகின்றனர். அச்சோற்றை வடித்த சத்துள்ள கஞ்சி ஆற்றைப் போலே தெருவிலே ஓடுகின்றது. புகழ் நிலைஇய மொழிவளர, அறன் நிலைஇய அகன்அட்டில், சோறு வாக்கிய கொழுங் கஞ்சி, யாறு போலப் பரந்து ஒழுகி என்பதனால் இச்செய்தியைக் காணலாம். இவ்வாறு அறங்கருதிச் சோறிடும் இடங்களுக்கு அறக்கூழ்ச்சாலை என்பது பழந்தமிழ்ப் பெயர். பிற்காலத்திலே இவைகளைத்தான் |