பக்கம் எண் :

நூலின் விளக்கம்17

தொண்டைமான் இளந்திரையன், ஒய்மானாட்டு நல்லியக்கோடன், நன்னன்சேய் நன்னன் என்பவர்கள்.

முருகனைப் பற்றிய பாட்டு ஒன்று; அது திருமுருகாற்றுப்படை. கரிகாற்பெருவளத்தானைப் பற்றிய பாடல்கள் இரண்டு; அவை, பொருநர் ஆற்றுப்படை; பட்டினப்பாலை. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிய பாட்டுக்கள் இரண்டு; அவை மதுரைக் காஞ்சி; நெடுநல்வாடை என்பவை. இளந்திரையனைப் பற்றிய பாட்டு ஒன்று; அது பெரும்பாண் ஆற்றுப்படை. நல்லியக்கோடனைப் பற்றிய பாட்டு ஒன்று; அது சிறுபாண் ஆற்றுப்படை. நன்னனைப் பற்றிய பாட்டு ஒன்று; அது மலைபடுகடாம். முல்லைத்திணையைப் பற்றியும், குறிஞ்சித் திணையைப் பற்றியும் பாடியவை ஒவ்வொன்று; அவை முல்லைப்பாட்டு; குறிஞ்சிப்பாட்டு.

ஆகவே பத்துப்பாட்டைப் பாடிய புலவர்கள் எண்மர்; பாடப்பட்ட தலைவர்கள் அறுவர். இவர்களுடைய வரலாறுகளை அந்தந்தப் பாட்டின் ஆராய்ச்சிகளிலே காணலாம்.

ஒவ்வொன்றும் ஒரே பாட்டு

பத்துப்பாட்டில் உள்ள ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு தனிநூல். ஒரே பாட்டில் ஒருநூல், தமிழ்ச் செய்யுளின் பெருமையை அறியாதார்க்கு அது வியப்பைத் தரலாம், ஒரே பாடலில் ஒரு நூலா என்று கேட்கத் தோன்றலாம்.

ஒரே பாட்டால் ஒரு நூலை இயற்றுவது தமிழுக்குரிய தனிச்சிறப்பில் ஒன்று, ஒருபாடலை ஆயிரம் அடிகள் வரையிலும் ஆக்கலாம் என்பது தமிழ் இலக்கணம், இவ்வாறு எழுதப்படும் செய்யுளுக்கு ஆசிரியப்பா அல்லது அகவற்பா என்று பெயர், ஆசிரியப்பாவை மூன்று அடிகளுக்குக் குறையாமல்