பக்கம் எண் :

பட்டினப்பாலை175

சூட்டுவார்கள். பரந்து கிடக்கும் தலைமயிரையுடைய செம்படவர்கள் கடல் மீது மீன் பிடிக்கப் போகமாட்டார்கள். தமது பெண்டிர்களுடன் விரும்பிய பலவற்றை உண்பார்கள். முழுமதி நாளிலே இவ்வாறு விளையாடுவார்கள்.

சினைச்சுறவின் கோடு நட்டு,
மனைச்சேர்த்திய வல்லணங்கினான்
மடல்தாழை மலர் மலைந்தும்,
பிணர்ப் பெண்ணைப் பிழிமாந்தியும்
புன்தலை இரும்பரதவர்
பைந்தழை மாமகளிரொடு
பாயிரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது
உவவு மடிந்து உண்டாடியும்                      (86--93)

இவ்வடிகளின் மூலம் வலைஞர்களின் வாழ்க்கையைக் காணலாம்.

கொடிகள்

கொடிகளின் அடையாளத்தைக் கொண்டே பல இடங்களையும், பல வகையான நிகழ்ச்சிகளையும் தெரிந்து கொள்ளுவது பண்டைக்கால வழக்கம். இக்காலத்திலே விளம்பரப் பலகையைப் பயன்படுத்துகிறோம். அக்காலத்திலே இதற்குப் பதிலாகக் கொடிகளையே பயன்படுத்தி வந்தனர். மதுரைக் காஞ்சியிலும் இச்செய்தி கூறப்பட்டுள்ளது. பட்டினப்பாலையிலும் இச்செய்தி குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

காவிரிப்பூம் பட்டினத்திலே எங்குப் பார்த்தாலும் பலவகையான கொடிகள் பறந்து கொண்டிருந்தன. அவைகள் வெவ்வேறு உருவங்களுடையவை. திருவிழாவைக் குறிக்கும் கொடிகள்; அறிஞர்களின் சபைகளைக் குறிக்கும் கொடிகள்; வியாபாரங்களைக் குறிக்கும் கொடிகள்; இன்னும் பலதிறப்பட்ட கொடிகள் பறந்து கொண்டிருந்தன.