பக்கம் எண் :

பட்டினப்பாலை177

பல் கேள்வித் துறை போகிய
தொல்லாணை நல்லா சிரியர்,
உறழ்குறித்து எடுத்த உருகெழு கொடியும்       (169--171)

இது அறிஞர் சபைக்கு மேல் கட்டப்பட்டிருக்கும் கொடி. பட்டிமன்றம்- விவாதசபை.

கட்டுத் தறியை அசைக்கின்ற யானைகளைப் போல, காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்திலே பல கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சி அசைந்து கொண்டு கிடக்கின்றன. அக்கப்பல்களின் பாய் மரங்களின் மேல் கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன.

வெளில் இளக்கும் களிறு போலத்,
தீம்புகார்த் திரை முன்துறை
தாங்கு நாவாய்த் துவன்றிருக்கை
மிசைக் கூம்பின் அசைக் கொடியும்           (172--175)

இவ்வடிகள் கப்பல்களின் மேல் கட்டப்பட்டிருக்கும் கொடிகளைக் குறிக்கின்றன.

மீனையும் இறைச்சியையும் துண்டுகளாக்கி, அவற்றை நெய்யிலே பொரிக்கின்ற ஓசை நிறைந்த முற்றம். இந்த முற்றத்திலே பலரும் புகும்படியான வாசற்படியிலே மணலைக் குவித்து மலரைச் சிந்தி, கள் விற்பனை செய்யப்படுகிறது என்பதை அறிவிக்கும் கொடியைக் கட்டியிருக்கின்றனர்.

மீன்தடிந்து விடக்கு அறுத்து
ஊன் பொரிக்கும் ஒலிமுன்றின்,
மணல்குவைஇ மலர் சிதறிப்
பலர் புகுமனைப் பலிப்புதவின்
நறவுகொடைக் கொடியோடு                  (176--180)

இது, கள் விற்பனை செய்யும் இடத்தை அறிவிக்கும் கொடி.