பக்கம் எண் :

பட்டினப்பாலை179

பல மொழியினர்வந்து கூடியிருக்கின்றனர். அவர்கள் காவிரிப்பூம்பட்டினத்து மக்களோடு ஒன்றுபட்டுக் கலந்து வாழ்கின்றனர். இத்தகைய அழியாத சிறப்புடையது காவிரிப்பூம் பட்டினம்".

மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்
முட்டாச் சிறப்பின் பட்டினம்                (216--218)

இவ்வடிகள் மேலே கூறிய உண்மையை விளக்குகின்றன. செல்வமும், செழிப்பும் நிறைந்த நாட்டிலே பலநாட்டினர் வந்து குடியேறுவது இயற்கை.

இன்னும்பல செய்திகள்

இவைபோன்ற இன்னும்பல செய்திகளையும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தமிழர்களிடம் இருந்த நாகரிகத்தையும் இந்நூலிலே காணலாம்

காவிரிப்பூம் பட்டினத்திலே சோமகுண்டம், சூரியகுண்டம் என்ற ஏரிகள் இருந்தன. அவைகளிலே மூழ்கிக் காமனை வணங்கும் பெண்கள் தங்கள் கணவருடன் இம்மையிலும் மறுமையிலும் இன்புறுவர். இதனை "இருகாமத்து இணையேரி" (391) என்ற குறிப்பால் காணலாம்.

காவிரிப்பூம் பட்டினத்திலே அமணர் பள்ளிகளும், பவுத்தர் பள்ளிகளும் இருந்தன.

சடைமுடி தரித்த முனிவர்கள் இருந்தனர். அவர்கள் வேதவிதிப்படி வேள்விகள் செய்துகொண்டிருந்தனர்.

சுவர்க்கம் என்பது அறம்செய்தோர் அடையும் ஒரு தனியுலகம் என்ற நம்பிக்கையிருந்தது.

கப்பல்களுக்குக் கரையை அறிவிக்கும் கலன்கரை விளக்குகள் இருந்தன.