| 180 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
பகைவர் நாட்டுப் பெண்களைச் சிறைப்பிடித்துக் கொண்டுவரும் வழக்கம் உண்டு. பெரும்பாலும் ஆடல் பாடல்களை அறிந்த அரண்மனைப் பணிப்பெண்களையே சிறைப் பிடித்துக்கொண்டு வருவார்கள். அவர்களுக்குக் "கொண்டி மகளிர்" என்று பெயர். உருவ வணக்கம் தமிழகத்திலே எங்கும் பரவியிருந்தது. தூணிலே தெய்வமிருப்பதாக எண்ணி வணங்குவர். அதற்குக் கந்திற் பாவை என்று பெயர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கையிலே போதுமான உணவுப்பொருள் உற்பத்தியாயிற்று. அந்நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு உணவுப் பொருள்கள் வந்து கொண்டிருந்தன. கரிகாற்சோழன் வெளிநாட்டினரை ஒடுக்கினான். வடநாட்டு மன்னர்களை வாட்டினான். குடநாட்டு வேந்தனை வென்றான். பாண்டியனுடைய படைபலத்தை அழித்தான். இடைய மன்னர்களின் பரம்பரையைப் பாழாக்கினான். இருங்கோவேள் என்னும் அரசனுடைய சுற்றத்தாரை அடியோடு அழித்தான். இந்த வரலாற்றுக் குறிப்புக்கள் இந்நூலில் காணப்படுகின்றன. கரிகாற்சோழன் வெறும் யுத்தவெறியனாக-போர்வீரனாக மட்டும் இல்லை. அவன் தனது ஆட்சிக் காலத்தில் காடுகளை அழித்து நாட்டின் பரப்பை விசாலப்படுத்தினான். குளங்களை வெட்டி நீரைத் தேக்கி நிலங்களுக்குப் பாயச் செய்து உழவுத் தொழில் பெருகச் செய்தான். நாடகம், சங்கீதம், போன்ற கலைகளும் மக்கள் மகிழ்ந்து வாழ்வதற்குப் போதுமான பல தொழில்களும் வளர்ச்சியடைந்திருந்தன. இவைகளையெல்லாம் இந்த பட்டினப்பாலையிலே படித்தறியலாம். |