பக்கம் எண் :

182பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

இரணிய முட்டம் என்ற பகுதியைச் சேர்ந்தது. "இரணிய முட்டத்துப் பெருங் குன்றூர்ப் பெருங்கௌசிகனார்" என்பது முழுப்பெயர். இப்பெயரே இவர் ஊரையும் நாட்டையும் விளக்குகின்றது.

இவர் சிறந்த புலவர். காடு, மலை முதலியவைகளின் இயற்கை வளங்களை அறிந்தவர். அவ்விடங்களில் எல்லாம் சுற்றித் திரிந்து அங்குள்ள நிகழ்ச்சிகளைக் கண்கூடாகக் கண்டறிந்தவர். இவ்வுண்மையை இவருடைய மலைபடுகடாம் எடுத்துக்காட்டுகின்றது. காட்டு வழிகளிலே, மலை வழிகளிலே, ஊர்ப்புறங்களிலே பல நாட்கள் அலைந்து திரிந்து அங்கே நடைபெறும் நிகழ்ச்சிகளையெல்லாம் நேரே கண்டறிந்த ஒரு புலவரால் தான் மலைபடுகடாம் போன்ற ஒரு நூலைப்பாட முடியும். இந்நூலைப் படிப்போர் இவ்வுண்மையைக் காண்பர்.

பாட்டின் தலைவன்.

இப்பாட்டின் தலைவன் நன்னன் என்பவன். இவன் வேளிர் குலத்தலைவன். இவனுக்கு இன்னும் பல பெயர்கள் உண்டு;  நன்னன் வேண்மான், வேள் நன்னன் சேய் நன்னன்; பல் குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள்நன்னன் சேய்நன்னன் என்பன அப்பெயர்கள். வேளிர் என்பவர்கள் குறுநில மன்னர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்;  பெருநிலத் தலைவர்கள்.

இவன் சிறந்த வீரன்; கொடைவள்ளல்; விருந்தினர்க்கும் இரவலர்க்கும் வேண்டுவன கொடுக்கும் இயல்புடையவன். வற்றாத வளங்கள் பலவற்றை உடையவன். இவனைப் போலவே இவனுடைய முன்னோர்களும் வீரர்களாகவும் கொடை வள்ளல்களாகவும் வாழ்ந்தனர்.