தொண்டை நாட்டின் ஒரு பகுதியாகிய பல்குன்றக்கோட்டம் என்பது இவனுடைய நாடு. திருவண்ணாமலையைச் சேர்ந்த சுற்றுப்புறப் பகுதியே இந்தப் பல்குன்றக்கோட்டம். கல்வெட்டுகளிலிருந்து இவ்வாறு ஊகிக்க இடம் உண்டு. திருவண்ணாமலையின் சுற்றப்புற ஊர்களிலே பல குன்றுகள் நிறைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. செங்கண்மா என்பது இவனுடைய தலைநகரம்; திருவண்ணாமலைக்கு மேற்கே பன்னிரண்டாவது கல்லில் உள்ளது இவ்வூர். இன்று செங்கமா அல்லது செங்கம் என்று வழங்கப்படுகின்றது. இது பழமையான ஊர். இவ்வூர் பண்டைக்காலத்தில் கோட்டை கொத்தளங்கள் அமைந்த ஒரு பெரிய நகரமாக இருந்தது என்பதற்கான அடையாளங்கள் இன்னும் காணப்படுகின்றன. இதுவே நன்னனுடைய செங்கண்மா நகரமாகும். எல்லா வளங்களையும் ஏராளமாகக் கொடுக்கும் நவிரமலையென்பது நன்னனுக்குச் சொந்தமான மலை. இங்கே "காரியுண்டிக் கடவுள்" வீற்றிருப்பதாகக் கூறுகிறது இந்நூல். காரியுண்டிக் கடவுள் சிவபெருமான். கருமையான நஞ்சை உணவாகக் கொண்ட கடவுள். இப்பொழுது இந்நவிரமலையைத் திரிசூலமலை என்றும் பர்வதமலை என்றும் அழைக்கின்றனர். காரியுண்டிக் கடவுளைக் காளகண்டேசுவரர் என்று கூறுகின்றனர். பல் குன்ற நாட்டிற் பாயும் ஆற்றைச் சேயாறு என்று சொல்லுகிறது மலைபடுகடாம். சேய்-முருகன், சேயாறு-முருகனாறு, இப்பொழுது இவ்வாற்றைச் சண்முகநதி என்று கூறுகின்றனர். இந்நதி செங்கம் என்ற ஊரை அடுத்துச் செல்லுகின்றது. |