பக்கம் எண் :

184பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

பாட்டின் அமைப்பு

ஒரு கூத்தன் நன்னனிடம் போய்ப் பரிசு பெற்று வருகின்றான். அவன் வரும் வழியிலே பரிசு கொடுப்போரைத் தேடிச் செல்லும் மற்றொரு கூத்தனைக் கண்டான். பரிசு தேடிச் செல்லும் கூத்தன் தன் சுற்றமாகிய பாணர்களுடனும், விறலியர்களுடனும், இசைக்கருவிகளுடனும் ஒரு மர நிழலிலே அமர்ந்திருந்தான்.

அவனைக் கண்டு பரிசு பெற்று வந்த பாணன், தான் பரிசு பெற்று வந்த வரலாற்றைச் சொல்லுகிறான். நன்னனிடம் போவதற்கான வழிகளைச் சொல்லி அனுப்புகிறான்.

அவன் கடந்து செல்ல வேண்டிய குன்று வழியைப் பற்றிக் கூறும்போது, அந்த வழியில் உள்ள இயற்கை வளங்கள், நடந்து போவதில் உள்ள இடையூறுகள் மலையிலே தங்கிச் செல்லவேண்டிய இடங்கள், மலைவாசிகளின் வாழ்க்கை, அவர்கள் நன்னனைத் தேடிச் செல்வோர்க்குத் தரும் உணவுகள் முதலியவற்றைக் கூறுகிறான்.

இதைப்போலவே காட்டு வழியைப்பற்றியும் எடுத்துச் சொல்லுகின்றான். நீர்வளம் மிகுந்த ஊர்களைப்பற்றியும் உரைக்கின்றான்.

இவ்வழிகளையெல்லாம் கடந்து நன்னனுடைய நகரையடைந்து அவனைப் புகழ்ந்து பாடினால், அவன் அந்தப் புகழ்ச்சியைப் பெரிதாக எண்ணாமல் அவர்களுக்கு நல்ல விருந்தளிப்பான்; எத்தனை நாட்கள் தங்கியிருந்தாலும் முதல் நாளைப்போலவே அத்தனை நாட்களும் உபசரிப்பான். நல்ல மது-மாமிசம் -மரக்கறிவகைகள்-தயிர்-பழம் முதலியவைகளைக் கொடுப்பான். ஊருக்குப் புறப்படும்போது ஆடை, அணிகள், தேர், குதிரை, யானை முதலிய செல்வங்களைப் பரிசளிப்பான்.