இச்செய்திகளை வரிசையாகச் சொல்லுகிறது இப்பாட்டு. இதுவே மலைபடுகடாம் என்னும் இந்நூலின் அமைப்பாகும். இந்நூல் இயற்றிய காலத்தில் செங்கண்மா நகருக்குப் போகச் சரியான சாலையில்லை. மலை, காடு, புதல், நீர்நிலைகள் இவைகளையெல்லாம் ஒற்றையடிப் பாதைகள் மூலம்தான் கடந்து செல்லவேண்டும். பெரும்பாலும் தமிழ்நாட்டில் இந்த நிலைதான் இருந்தது. இப்பொழுது இருப்பதுபோன்ற நல்ல சாலைகளோ, ஆறுகளுக்குப் பாலங்களோ இல்லை. இதை இந்நூலால் காணலாம். ஏனைய ஆற்றுப்படைகளாலும் அறியலாம். மலையிற்கேட்கும் ஓசைகள் இந்நூலின் பெயருக்கே காரணமாக இருக்கும் ஓசைகள் எவை எவை என்பதைப் பார்ப்போம். 1. ஆண்குரங்கு பெரிய பலாப்பழத்தைத் தோண்டுகின்றது. அப்பழத்திலிருந்து தேன் ஊற்றுகின்றது. அதன் நறுமணம் எல்லாத் திசைகளிலும் வீசுகின்றது. தேவமாதர்கள் இத்தேனுடன் கலந்து வீசும் அருவியின் இன்பத்தை நுகர்கின்றனர். அவர்கள் விரைந்து வீழும் அவ்வருவியைக் கையால் ஏந்திக்கொண்டு அதிலே நீராடுகின்றனர். அதனால் உண்டான ஓசை உங்கள் வாத்தியங்களைப் போல் ஒலிக்கின்றது. கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந்து ஊறலின் மலைமுழுதும் கமழும் மாதிரந்தோறும் அருவிநுகரும் வான் அரமகளிர் வருவிசைதவிராது வாங்குபு குடைதொறும் தெரியிமிழ் கொண்டநும் இயம்போல் இன்னிசை (292--296) 2. தன் இனத்தைப் பிரிந்து வந்த ஆண்யானையைத் தினைப்புனத்தை அழிக்காதபடி பிடிப்பதற்காகப்-பரணிமேல் |