பக்கம் எண் :

மலைபடுகடாம்189

15. முல்லைப் புதர்களும், குறிஞ்சிப் புதர்களும் நாசமாகும்படி எருமைக் கடாக்கள் ஒன்றோடொன்று போர் செய்து கொண்டிருக்கின்றன.

வள் இதழ்க் குவளையும் குறிஞ்சியும் குழைய,
நல் ஏறு பொரூஉம், கல் என் கம்பலை.             (334-335)

16. சிறுவர்கள் தாங்கள் தின்று மிஞ்சிய பலாச்சுளைகளைப் பரப்பினர். அவைகளின் கொட்டைகளை எடுப்பதற்காகக் கன்றுகளைப் பிணைத்துக் காந்தள் மடலால் அடித்து அதன்மேல் ஓட்டுகின்றனர்.

காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி
வண்கோட் பலவின் சுளைவிளை தீம்பழம்
உண்டு படும் மிச்சில் காழ்பயன் கொண்மார்,
கன்று கடாஅ வுறுக்கும் மகாஅர் ஓதை            (336--339)

17. மேகத்தைப் போல் காணப்படும் கொட்டகைகளிலே, மூங்கிலைப் போன்ற கரும்பைப் பிளக்கும்படி உடைத்து ஆலையிலே ஆட்டுகின்றனர்.

மழைகண்டன்ன ஆலைதொறும், ஞெரேர் எனக
கழைகண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்     (340--341)

18. தினையைக் குற்றுகின்ற மகளிர் இசைபாடிக்கொண்டு குற்றுகின்றனர்.

தினைக்குறு மகளிர் இசைபடு வள்ளையும்.           (342)

19. சேம்பு, மஞ்சள் இவைகளைப் பன்றிகள் பாழ்பண்ணாமல் காவல் காக்கின்றனர். அவர்கள் பன்றிகளை விரட்டுவதற்காகப் பறையடிக்கின்றனர்.

சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையும்                     (343--344)

20.    இவ்வோசைகளின் காரணமாக எழுந்த மலையின் எதிர்ஒலியும் கேட்கிறது.