| 190 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
குன்றகச் சிலம்பும் இவ்வாறு இருபது வகையான ஓசைகளைக் குறிப்பிடுகிறார் இவ்வாசிரியர். இவ்வோசைகளே "மலைபடுகடாம்" ஆகும்; அதாவது மலையில் தோன்றும் ஓசைகள் ஆகும். இங்கே எடுத்துக்காட்டிய செய்யுள்கள் 292 முதல் 344 வரையில் உள்ள அடிகள். இவ்வோசைகளை விரிவாக எடுத்துக்காட்டியதன் மூலம், மலையின் இயற்கை வளங்களும், அங்கு வாழும் மக்கள் செயல்களும் விளக்கப்பட்டன. கானவர் வாழ்க்கை கானவர் என்போர் மலைச்சாரலிலே காட்டில் வாழ்வோர்; குறிஞ்சி நில மக்கள். இவர்களை முல்லை நிலத்து மக்கள் என்றும் கூறுவர். இவர்களுடைய வாழ்க்கையை அப்படியே படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் இவ்வாசிரியர். மணம் செய்யும் வீட்டைப்போலப் பல பண்டங்களும் நிறைந்து வாசனை வீசுகின்ற மலையின் பக்கத்திலே வாழ்வார்கள். அவர்கள் நிறைய தேன் வைத்திருக்கின்றனர்; கிழங்குகள் வைத்திருக்கின்றனர்; வட்டிலில் அதாவது தட்டத்தில் நிறைய மாமிசத்தை நிரப்பி வைத்திருக்கின்றனர்; அவர்கள் சிறிய கண்களையுடைய பன்றிகளை வேட்டையாடுவார்கள். அவைகளின் மாமிசங்களிலே கெட்டுப்போனவற்றை எடுத்து எறிந்து விடுவார்கள். நல்ல மாமிசத்தை மட்டும் எடுத்துக் கொள்வார்கள். அதைத் தங்களால் கொல்லப்பட்ட யானைகளின் தந்தங்களிலே மாட்டிக் காவடிபோலத் தூக்கிக்கொண்டு வருவார்கள். மணஇல் கமழும் மாமலைச் சாரல் தேனினர் கிழங்கினர் ஊனார் வட்டியர், சிறுகண் பன்றிப் பழுதுளிப் போக்கிப் பொருதுதொலை யானைக் கோடுசீராகத் தூவொடு மலிந்த காய கானவர் (151--155) |