இவ்வடிகள் கானவர் வாழ்க்கையைக் காட்டுகின்றன. அவர்கள் இயற்கையாகக் கிடைக்கும் தேனையும் கிழங்கையும் உண்டனர். தங்கள் முயற்சியாற் பெற்ற பன்றிக்கறியையும், மாமிசங்களையும் உண்டு வாழ்ந்தனர். விருந்தோம்பல் தமிழர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்த செய்தி. அவர்கள் தம் வீடு தேடி வந்தோர் யாவராயினும் அவர்களை உபசரிக்காமல் விடமாட்டார்கள். தாம் உண்ணும் உணவு எதுவாயினும் அதை விருந்தினர்க்கும் கொடுத்துத் தாமும் உண்டு மகிழ்வர். தமிழ்நாட்டில் வாழ்ந்த எல்லா மக்களிடமும் இக்குணம் உண்டு. இது தமிழர்களின் பரம்பரைக்குணம். தமிழர்களின் இப்பண்பாட்டை இந்நூலாசிரியர் விரிவாகக் கூறியிருக்கின்றார். சிற்றூர்களைச் சேரும்போது "நாங்கள் நன்னனுடைய கூத்தர்கள்" என்று சொன்னால் போதும். உங்களுடைய வீட்டிற்குள் போவதுபோலவே அவர்களுடைய வீட்டிற்குள் நுழையலாம். உறவினர்களைப் போலவே உங்களுடன் அவர்கள் ஒன்றுபடுவார்கள். நீங்கள் நீண்ட வழியைக் கடந்த துன்பந்தீர உங்களுக்கு இனிய மொழிகளைக் கூறுவார்கள். நெய்யிலே வெந்த மாமிசத்தின் பொரியலையும் சிறிய தினைச்சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள். மானவிறல்வேள் வயிரியம் எனினே நும்மில்போல நில்லாது புக்குக், கிழவிர்போலக் கேளாது கெழீஇச் சேட்புலம்பு அகல இனிய கூறிப் பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையோடு குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவீர் (164--169) இவ்வடிகள் சிற்றூர் மக்களின் சிறப்பை விளக்குகின்றன. "காட்டிலே கோவலர் இருக்கையை அடைவீர்களானால் வேறிடங்களிலே மேய்ந்துவந்த சங்குபோன்ற வெண்மையான |