பக்கம் எண் :

192பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

பசுக்களின் பாலை ஆயர் மகளிர் தந்து உபசரிப்பர். அதனை அருந்தி உங்கள் வழிநடைவருத்தம் தீர்ந்து புதிய பலத்தைப் பெறுவீர்கள்

வேறுபுலம் படர்ந்த ஏறுடையினத்த,
வளைஆன் தீம்பால், மிளைசூழ் கோவலர்
வளையோர் உவப்பத் தருவனர் சொரிதலின்,
பலம் பெறுநசையொடு பதிவயின் தீர்ந்தநும்
புலம்புசேண் அகலப், புதுவிர் ஆகுவிர்            (408--412)

இவ்வடிகள் ஆயர்களின் அன்பான விருந்தோம்பலை விளக்குகின்றன.

கல்லென்ற ஓசைநிறைந்த வழியிலே-கடலைப்போல் இரைந்துகொண்டிருக்கும் பல ஆடுகள் நிறைந்த மந்தையுள்ள இடத்திலே-இரவில் நீங்கள் புகுவீர்களானால் பாலையும், பாற்சோற்றையும் பெறுவீர்கள். அந்த ஆட்டிடையர்கள் தங்களுக்காக வைத்திருக்கும் அவற்றை உங்களுக்கு அளிப்பார்கள்.

கல்லென் கடத்திடைக், கடலின் இரைக்கும்
பல்யாட்டு இனநிரை, எல்லினிர்புகினே,
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்           (415--417)

இவ்வடிகளும் இடையர்களின் விருந்தோம்பலை விளக்கிக் காட்டுகின்றன.

"சிவந்த வேங்கை மலரைப் போன்ற அவரை விதை, மூங்கில் அரிசி, மேட்டு நிலத்தே விளைந்த நெல்லரிசி இவற்றைப் புளியுடன் சேர்த்துச் சமைத்த உணவை, நீங்கள் வழிநடந்துபோன வருத்தம் தீரும்படி புல் வேய்ந்த சிறிய குடிசைகளிலே பெறுவீர்கள். அங்கேயே நீங்கள் தங்குவீர்களானால் பொற்றுகள் போன்ற அரிசியால் வெண்மை மாறும்படி சமைத்த சோற்றைக் குளிர்ந்த நெய்யோடு கலந்து ஒவ்வொருநாளும் பெறுவீர்கள்.