நிறைந்த செய்திகளை அமைத்தெழுதும் முறையை அறிந்து எழுதினர், இதற்காகவே ஆசிரியப்பாவைப் பயன்படுத்தி வந்தனர். பண்டைத் தமிழ் நூல்கள் பாடல் உருவில் தோன்றுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு, உரைநடையை அப்படியே உள்ளத்தில் வைத்துக்கொள்ள முடியாது, பாடல்களை அப்படியே மனத்துள் பாடமாக வைத்துக்கொள்ளலாம், இந்நோக்கத்தோடும் பழந்தமிழ்ப் புலவர்கள் பாடல்களிலேயே நூல்களை எழுதினார்கள். தமிழ்ப் பாடல்களிலே பலவகையுண்டு, அவற்றுள் முதன்மையானவை ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா என்பவை, இவைகளை ஒட்டிய இனப்பாக்கள் பல, இந்த நான்கு முதற்பாக்களில் தலைமையானது ஆசிரியப்பா, ஒரு புலவன் தன் உள்ளத்திலே எண்ணியதைக் குறுக்காமல் சிதைக்காமல் அப்படியே உரைநடைபோல் எடுத்துக்காட்டுவதற்கு ஏற்ற பாடல் ஆசிரியப்பா ஒன்றுதான்; இதற்கு அடுத்தது வஞ்சிப்பா. ஆசிரியம் வஞ்சி வெண்பாக்கலியென நாலியற்று என்ப பாவகை விரியே (தொல், செய், 101) இவ்வாறு பாவகையைப்பற்றிக் கூறும் சூத்திரத்திலே ஆசிரியப்பாவை முதலில் வைத்தார் தொல்காப்பியர். ஆசிரியப்பாவின் இச்சிறப்பை அறியாத பிற்காலத்து ஆசிரியர்கள், இம்முறையை மாற்றினர்; வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று கூறினர். நூலெழுதுவதற்கு ஏற்றதாக ஆசிரியப்பா அமைந்திருப்பதனாலேயே, சங்ககால நூல்கள் பலவும் ஆசிரியப்பாவிலே அமைந்திருக்கின்றன, சங்க காலத்திற்குப் பின்னால் |