அவர்கள் திறமையைக் கண்டறிந்து வெளிப்படும்படி சொல்லிக் காட்டுவார்கள். அவர்களை நல்லமுறையிலே நடத்துவார்கள். நன்னனைப் போலவே அவனுடைய சுற்றத்தாரும் நல்லவர்கள்; ஒழுக்கமுடையவர்கள் தொலையா நல்லிசை உலகமொடுநிற்பப் பலர் புறங்கண்டவர் அருங்கலந்தரீஇப் புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகைமாரியும், இகழுநர்ப்பிணிக்கும் ஆற்றலும், புகழுநர்க்கு அரசுமுழுது கொடுப்பினும் அமராநோக்கமொடு தூத்துளி பொழிந்த பொய்யா வானின் வீயாதுசுரக்கும் அவன்நாள் மகிழ் இருக்கையும் நல்லோர்குழீஇய நாநவில் அவையத்து வல்லாராயினும் புறமறைத்துச் சென்றோரைச் சொல்லிக்காட்டிச் சோர்வின்றி விளக்கி, நல்லிதின் இயக்கும், அவன் சுற்றத்து ஒழுக்கமும் (70--80) இவ்வடிகள் நன்னனுடைய சிறப்பை விளக்குகின்றன. பழங்காலத்து நிலத்தலைவர்கள் பொதுமக்களிடம் எத்தகைய மதிப்புப் பெற்று வாழ்ந்தனர் என்பதையும் இதனாற் காணலாம். உவமைகள் ஒவ்வொன்றையும் உவமைகாட்டி விளக்குவதிலே இவ்வாசிரியர் மிகவும் சிறந்தவர். சிறந்த புலமையும் சிந்தனாசக்தியும் உடையவர்களால்தான் பொருத்தமான உவமைகளைத் தேர்ந்தெடுத்துக் கூற முடியும். இவர் காட்டும் உவமைகளிலே சிலவற்றைமட்டும் பார்ப்போம். "மேதிஅன்ன கல்பிறங்கு இயவு" "எருமைகளைப்போலக் கருங்கற்கள் குண்டு குண்டாக கிடக்கின்ற வழி" கருங்கல்லுக்கு எருமை உவமானம். |