| 198 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
"காழ்மண்டு எஃகம் களிறுமுகம் பாய்ந்தன. ஊழ்மலர் ஒழிமுகை உயர்முகம் தோயத் துறுகல்சுற்றிய சோலைவாழை" (129--131) காம்பையுடையவேல், யானையின் முகத்திலே குத்தியிருப்பதுபோல, வாழையின் மலர்கள் மலையைத் தொட்டுக்கொண்டிருக்கின்றன. மலையை யானையாகவும் வாழைப்பூவை வேற்கம்பாகவும் உவமிக்கப்பட்டுள்ளன. "படுத்துவைத்தன்ன பாறை மருங்கின் எடுத்துநிறுத்தன்ன இட்டரும் சிறுநெறி" (15--16) சமமாகப் பரப்பிவைத்திருப்பது போன்ற பாறையின் பக்கத்திலே செங்குத்தான உயரமான வழி காணப்படுகின்றது. அதைப் பார்த்தால் குறுகலான ஒரு நீண்ட வழியை அப்படியே எடுத்துச் செங்குத்தாக நிறுத்தியிருப்பதுபோல் தோன்றுகிறது. தூமலர்துவன்றிய கரைபொரு நிவப்பின், மீமிசைநல்யாறு கடற் படர்ந்தா அங்கு. யாம் அவணின்றுவருதும் (51--53) மலர்கள் நிறைந்து, கரையை மோதிக்கொண்டு, மலையின் மீதிருந்து கடலுக்கு வீழ்ந்தோடும் நல்ல ஆறுபோல நாம் அந்த நன்னனிடமிருந்து வருகின்றோம். இவ்வாறு பரிசு பெற்றுவந்த பாணன் சொல்லுகின்றான். தன்னை ஆறாகவும், தான் பெற்ற பரிசுப்பொருள்களை அந்த ஆற்றுவெள்ளம் அடித்துக் கொண்டு வரும் பொருள்களாகவும், அந்த நன்னனைப் பல வளங்களும் நிரம்பிய மலையாகவும் உவமித்துக் காட்டுகிறார். இவைபோன்ற பல சிறந்த உவமைகளைக் காணலாம். |