பக்கம் எண் :

மலைபடுகடாம்199

பழக்கவழக்கங்கள்

பழந்தமிழர்களிடம் குடிகொண்டிருந்த பழக்கவழக்கங்களை இந்நூலிலே காணலாம்.

போரிலே மாண்ட வீரர்களின் நினைவுக்குறியாக மரத்தடிகளிலே அவர்கள் பெயர் பொறித்த கற்களை நட்டு வைத்திருப்பார்கள். மக்கள் அக்கற்களை வணங்குவார்கள்.

கூத்தர், பாணர், பொருநர் முதலியோர் பாடுவதற்கோ ஆடுவதற்கோ, தொடங்குமுன் தெய்வத்தை வணங்குவார்கள்.

ஓரிடத்திற்குப் புறப்படும்முன் பறவைச் சகுனம் பார்க்கும் வழக்கம் உண்டு.

மூங்கிற் குழாயிலே மதுவை அடைத்து வைத்திருந்து பக்குவப்படுத்தி அருந்துவார்கள்.

எருமைத் தயிரையும் மூங்கிற் குழாயிலே வைத்திருக்கும் வழக்கம் உண்டு.

இசைக் கருவிகளுக்கு உறையிட்டுப் பத்திரமாகப் பாதுகாத்து வைப்பார்கள்.

சக்கரத்திலே மண்ணைப் பிடித்து வைத்துப் பாத்திரங்கள் செய்யும் குயவர்கள் பழந்தமிழ்நாட்டில் இருந்தனர். மண் பாண்டத்தொழில் தமிழ்நாட்டின் பழமையான தொழில்.

உலோகங்களை உருக்கிப் பாத்திரங்கள் செய்யும் தொழில் வளர்ந்திருந்தது.

தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி (தாளம்) என்னும் நால்வகை இசைக்கருவிகளையும் செய்தனர்.