பக்கம் எண் :

நூலின் விளக்கம்21

பலவற்றைப் புரிந்து கொள்ளமுடியாது, இன்று பத்துப்பாட்டைப் படித்துத் தெரிந்துகொள்ளப் பயன்படுவது நச்சினார்க்கினியர் உரை ஒன்றே.

பத்துப்பாட்டின் ஒவ்வொரு பாட்டுக்கும் பாட்டைச் சிதைக்காமல், அடிகளை மாற்றாமல் அப்படியே ஆற்றோட்டமாக வைத்தே பொருள் சொல்ல முடியும், இவ்வாறு மறைமலையடிகள் பட்டினப்பாலைக்கும், முல்லைப்பாட்டிற்கும் உரையெழுதியிருக்கின்றார்; அவைகள் சிறந்த ஆராய்ச்சியுரை, அதே முறையில் மற்ற பாடல்களுக்கும் அறிஞர்கள் உரையெழுதுவார்களானால் பத்துப்பாட்டின் பெருமை இன்னும் பலமடங்கு உயரும்.

இந்நூலின் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும், நச்சினார்க்கினியர் உரைமுடிந்தவுடன் பலவும் ஒன்றும் ஆகிய வெண்பாக்கள் காணப்படுகின்றன, அவைகளுக்கு உரையில்லை, அந்த வெண்பாக்கள் அந்தந்தப் பாடலின் கருத்தைத் தழுவியே எழுதப்பட்டிருக்கின்றன, அவை பத்துப்பாட்டின் ஆசிரியர்களால் பாடப்பட்டவைகளாக இருந்தால் அவைகளுக்கும் நச்சினார்க்கினியர் உரையெழுதாமல் விட்டிருக்கமாட்டார்.

திருமுருகாற்றுப்படை முடிவில் 10, பொருநர் ஆற்றுப்படை முடிவில் 3, சிறுபாணாற்றுப்படை முடிவில் 2, பெரும்பாண் ஆற்றுப்படை முடிவில் 1, முல்லைப்பாட்டின் முடிவில் 2, மதுரைக்காஞ்சியின் முடிவில் 2, நெடுநல்வாடையின் முடிவில் 1, குறிஞ்சிப்பாட்டின் முடிவில் 2, பட்டினப்பாலை முடிவில் 1, (இது பொருநர் ஆற்றுப்படையின் முடிவில் உள்ள மூன்றாவது பாட்டு) மலைபடுகடாம் முடிவில் 1, ஆக 24 வெண்பாக்கள் காணப்படுகின்றன, இவைகளை நச்சினார்க்கினியர் காலத்திற்குப் பின்னால் யாரேனும் எழுதிச் சேர்த்திருக்க வேண்டும்.