| 2. திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டிலே முதற்பாட்டு திருமுருகாற்றுப்படை, ஆசிரியப்பாவால் ஆகியது, 317 அடிகளைக் கொண்டது, இதற்குப் புலவர் ஆற்றுப்படையென்ற மற்றொரு பெயரும் உண்டு.  திருமுருகாற்றுப்படை, திரு - முருகு - ஆற்றுப்படை, திரு - அழகிய; முருகு - முருகனிடம்; ஆற்றுப்படை - வழிப்படுத்துவது, முருகனிடம் செல்வதற்கு வழிசொல்லிப் போகவிடுவது என்பதே இதன் முடிந்த பொருள்.  ஆற்றுப்படை என்பது சங்ககாலப் புலவர்கள் செய்த நூல் வகைகளில் ஒன்று; பரிசு பெற்று வந்த ஒருவன்; பரிசு பெற நாடிச் செல்லும் மற்றொருவனுக்கு, வழிசொல்லி அனுப்புவது; இதுவே ஆற்றுப்படை, முன்னுள்ள நூல் விளக்கத்திலும் இது கூறப்பட்டுள்ளது.  பத்துப்பாட்டில் உள்ள ஏனைய ஆற்றுப்படைகளை விட இத்திருமுருகாற்றுப்படை சிறிது வேறுபாடுள்ளது, ஏனைய ஆற்றுப்படைகள் மக்கள்மேற் பாடப்பட்டவை; இது தெய்வத்தின்மேல் பாடப்பட்டது, அவைகள் இம்மை இன்பத்திற்கான பொருள் வேண்டிப் புலவர்களால் பாடப்பட்டவை, இது மறுமை இன்பத்திற்கான அருள் வேண்டி அறிஞரால் பாடப்பட்டது.  |