| 26 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
பாடிய நக்கீரர் வேறு; பதினோராந்திருமுறை நக்கீரரே, புராணங்களிலே வழங்கப்படும் வரலாறுகளுக்கு இலக்கானவர் என்று கூறுவர். சங்ககாலத்து நக்கீரனாரின் பெயரால் வேறொரு பெரும்புலவர் பதினோராந்திருமுறைப் பிரபந்தங்களைப் பாடியிருக்கலாம்; நக்கீரனாரின் சிறப்பு கருதி அவரைப் பற்றிப் பல வரலாறுகளைப் புனைந்திருக்கலாம் என்று எண்ண இடமுண்டு. இத்தகைய பராராட்டுதலுக்குரிய பெரும்புலவராகிய நக்கீரனாரின் பெருமைக்கு இத்திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டில் முதற்பாட்டாக அமைந்திருப்பதே போதுமான சான்றாகும். பாட்டின் அமைப்பு வீடு பெற விரும்பிய அறிஞன் ஒருவனுக்கு, அதைப் பெறுவதற்கான வழிதுறைகளை அறிந்தவன் ஒருவன் முருகனிடம் போகும்படி மொழிகின்றான். இம்முறையில் பாடப்பட்டிருப்பதே இத்திருமுருகாற்றுப்படை. இந்நூலில் ஆறு பகுதிகள் அமைந்திருக்கின்றன. அவை, திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவிநன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை என்பவை. முருகன் திருப்பரங்குன்றத்தில் விருப்புடன் வாழ்கின்றான்; திருச்சீரலைவாயில் அமர்ந்து அன்பர்களுக்கு அருள்புரிகின்றான்; திருவாவிநன்குடியிலே பக்தர்கள் பலரும் குழுமி முருகனை வழிபடுகின்றனர். திருவேரகத்தில் அருமறை தெளிந்த அந்தணர்கள் முருகனை வணங்குகின்றனர்; முருகன் அருள் விரும்பும் அன்பர்கள் பலரும் குன்றுகள்தோறும் சென்று வழிபாடு செய்கின்றனர். பழமுதிர்சோலையிலே பலவிடங்களிலே பலருங்காணத் தலைவனாக வீற்றிருக்கின்றான் முருகன். இப்படி முருகன் ஆறு இடங்களிலே |