பக்கம் எண் :

திருமுருகாற்றுப்படை27

அமர்ந்து அன்பர்களுக்கு அருள்புரிவதைக் கூறுகிறது இப்பாட்டு. இந்த ஆறு இடங்களையும் ஆறு படைவீடுகள் என்பர்.

திருப்பரங்குன்றம் என்பது மதுரைக்கு மேற்கில் உள்ளது. பாண்டிய மன்னன் ஒவ்வொருநாளும் பரங்குன்றுக்கு வந்து முருகனை வழிபடுவான் என்று பரிபாடலில் காணப்படுகின்றது. மதுரையின் தெய்வீகத்தைவிடப் பரங்குன்றின் தெய்வீகம் பழமையானது என்று ஊகிக்க இடமுண்டு.

திருச்சீரலைவாய் என்பது திருச்செந்தூர். இதுவும் பரங்குன்றைப் போலவே பழமையான திருப்பதி.

திருவாவிநன்குடி என்பது பழநி. இதுவும் வரலாற்றுப்பெருமை வாய்ந்தது.

திருவேரகம் என்பது தஞ்சை வட்டாரத்தில் காவிரிக்கரையில் உள்ள சுவாமிமலை என்று கூறுகின்றனர் இக்காலத்தினர். "திருவேரகம் மலைநாட்டில் உள்ள ஓர் திருப்பதி" என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றார். திருவேரகத்தைப் பற்றிய பகுதியில் காவிரியாற்றைப் பற்றிய குறிப்பே காணப்படவில்லை. சுவாமிமலையும் இயற்கைமலை அன்று; கட்டுமலை! .

"சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்"

என்பது சிலப்பதிகாரம் குன்றக்குரவையில் உள்ளது. இதில் வெண்குன்றம் என்பதற்குச் சுவாமி மலை என்று பொருள் கூறுகின்றார் அரும்பதவுரை ஆசிரியர். இதனாலும் சுவாமிமலை வேறு, ஏரகம் என்பது வேறு என்று அறியலாம்.

ஆதலால் நச்சினார்க்கினியர் நவில்வதே உண்மையாக இருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டு. ஆகையால் திருவேரகம் எதுவென்று உறுதியாகக் கூறமுடியவில்லை.