பக்கம் எண் :

திருமுருகாற்றுப்படை31

நூற்றுப் பத்தடுக்கிய நாட்டத்து, நூறுபல்
வேள்விமுற்றிய, வென்றடு கொற்றத்து,
ஈரிரண்டேந்திய மருப்பின், எழில்நடைத்,
தாழ்பெருந்தடக்கை, உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்"

இது இந்திரனைக் குறித்து வந்த அடிகள்.          (155--159)

தாமரை மலரில் பெற்றெடுக்கப்பட்டவன்; அழியாத ஊழிதோறும் படைத்தல்தொழிலைச் செய்பவன்; நான்கு முகங்களை உடையவன்.

தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவன்"

இவை நான்முகனைக் குறிக்கும் அடிகள்.          (164--165)

இன்னும், ஆதித்தர் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர், மருத்துவர் இருவர் ஆகிய தேவர்களும் காணப்படுகின்றனர்.

மேலும் தேவர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், கிம்புருடர், இயக்கர், விஞ்சையர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், பூதர், பைசாசர், தாராகணம், நாகர், ஆகாய வாசிகள், போக பூமியோர் என்ற பதினெண் கணங்களும் காணப்படுகின்றனர்.

புராணங்களிலே காணப்படும் எல்லாத் தெய்வங்களும் திருமுருகாற்றுப்படையிலே காணப்படுகின்றன. ஆனால் விநாயகர் மட்டும் காணப்படவில்லை.

கோவில்கள்

சங்க காலத்திலே இன்றிருப்பது போன்ற பெரும் பெரும் கோவில்கள் இல்லை. சிறு சிறு கோவில்களே இருந்தன.