| 32 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
அக்காலத்து மக்கள் எங்கும் தெய்வம் இருப்பதாக நம்பினர். ஆகையால் அவர்கள் இயற்கை வனப்பமைந்த எல்லா இடங்களிலும் தெய்வத்தை வணங்கி வழிபட்டனர். அருவ வழிபாடும் உண்டு; உருவ வழிபாடும் உண்டு. தமிழர்கள் முருகனைக் காட்டிலே வைத்து வணங்கினர்; சோலைகளிலே வைத்து வணங்கினர்; ஆற்றின் நடுவிலே அமைந்த அரங்கங்களிலே அவனை வணங்கினர்; ஆற்றங்கரைகளிலே - குளத்தங்கரைகளிலே முருகனைப் பூசித்தனர்; முச்சந்தி, நாற்சந்தி, ஐஞ்சந்திகளிலும் அவனை வணங்கினர்; புதிதாகப் பூத்த கடம்ப மரத்திலே முருகனைக்கண்டு வணங்கினர். மரத்தடியிலும், அம்பலத்திலும், மரக்கட்டைகளிலும் முருகனை வணங்கினர். "காடும், காவும், கவின்பெறு துருத்தியும், யாறும், குளனும், வேறுபல் வைப்பும், சதுக்கமும், சந்தியும், புதுப்பூங் கடம்பும், மன்றமும், பொதியிலும், கந்துடை நிலையினும் முருகனைக் கண்டு வணங்கினர் என்று கூறும் பகுதியால் முருகனை எல்லா இடங்களிலும் வணங்கினர் என்பதைக் காணலாம். (223--226) உருவ வணக்கம் உருவ வணக்கம் தமிழ் நாட்டிலேதான் தோன்றியிருக்க வேண்டும். சங்க நூல்களில் எல்லாம் உருவ வணக்கம் காணப்படுகின்றது. தமிழர்களின் பழைய நாகரிகத்திலிருந்தே உருவ வணக்கம் உதித்தது என்று சொல்ல இடமுண்டு. |