பண்டைத் தமிழர்கள் போரிலே மாண்ட வீரர்களைப் போற்றினர். அவர்களுக்காகக் கல் நட்டு விழா செய்தனர்; அவர்களுடைய புகழைப் பாடினர், வீரர்களுக்காகக் கல் நாட்டு விழா செய்யும் முறையைத் தொல்காப்பியத்திலே காணலாம். வீரர்களுக்கு உருவமைத்து அவர்கள் வெற்றியைக் கொண்டாடி வணங்கியது போலவே கடவுளர்களுக்கும் கற்சிலைகள் செய்து வைத்து வணங்கினர். கடைச்சங்க காலத்தில் இவ்வழக்கம் தமிழ் நாடெங்கும் பரவியிருந்தது. தமிழர்கள் சிற்பக்கலையிலே சிறந்து நின்றமைக்கு இவ்வுருவ வணக்கம் ஒரு காரணமாகும். இது குறிப்பிடத்தக்கது. பண்டைத் தமிழர் முருகனை ஆறுமுகம், பன்னிரண்டு கையும் உடைய உருவமாகச் செய்து வைத்து வணங்கினர். இதைத் திருமுருகாற்றுப் படையிலே காணலாம். முருகனுடைய உருவம் அவனைப் பற்றிப் புராணத்திலே கூறும் வரலாற்றை ஆதாரமாகக் கொண்டது. புராண வரலாற்றைக் கொண்டே முருகனுடைய உருவமைத்தனர். ஓவியம் தீட்டினர். முருகன் திருஉருவைப் பற்றி நக்கீரர் அழகாகப் பாடியிருக்கின்றார். "ஒரு முகம் சூரியனைப் போல ஒளி வீசிக்கொண்டிருக்கின்றது; ஒரு முகம் தன்னை வணங்கும் அன்பர்களுக்கு வரங்கொடுத்துக் கொண்டிருக்கின்றது; ஒரு முகம் அந்தணர்களின் வேள்விகளைப் பாதுகாக்கின்றது: ஒரு முகம் உண்மையறிவை உணர்த்திக் கொண்டிருக்கின்றது; ஒருமுகம் அன்பர்களின் பகைவர்களை அழித்து அவர்களுக்குப் போரிலே வெற்றியைத் தருகின்றது; ஒரு முகம் வள்ளியுடன் மகிழ்ந்து வார்த்தையாடிக்கொண்டிருக்கிறது. |