தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கினார். பிறகு சிவனார் தனது விந்துவை இந்திரன் கையிலே கொடுத்தார். அவனால் அதன் வெப்பத்தைத் தாங்கமுடியவில்லை. அவன் அத்திரி, குச்சன், கௌதமன், பிருகு, காசிபன், அங்கிரா, வசிட்டன் என்னும் ஏழு முனிவர்களிடமும் அந்த விந்துவைக் கொடுத்துவிட்டான். அவர்களும் அதன் வெப்பத்தைப் பொறுக்க முடியாமல் அக்கினி குண்டத்திலே அதைப் போட்டுவிட்டனர்; வெப்பம் தணிந்தபின் அதனை எடுத்தனர்; தங்கள் பத்தினிகளிடம் கொடுத்தனர். அவர்களில் வசிட்டர் மனைவியான அருந்ததியைத் தவிர ஏனைய அறுவரும் அதனை அருந்தினர்; உடனே கருவுயிர்த்தனர்; அறுவரும் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். அந்த ஆறு குழந்தைகளும் இமயமலையிலே உள்ள சரவணப் பொய்கையிலே விடப்பட்டன. அவைகளைப் பார்வதி ஒன்றாக வாரியெடுத்தாள். ஆறும் ஒன்றாகி ஆறுமுகம். பன்னிரண்டு கையுமுடைய முருகனாகக் காட்சியளித்தது. இவ்வரலாறு திருமுருகாற்றுப்படையிலே காணப்படுகின்றது. "வானம், காற்று, தீ, நீர், நிலம் ஆகிய ஐந்து பூதங்களுள் ஒருவனாகிய தீ தன் உள்ளங்கையில் ஏந்தினான். அதனை உண்ட முனிவர்களின் மனைவிகளாகிய அறுவரும் பெற்றெடுத்த ஆறு உருவங்களாக அமைந்த செல்வனே! கல்லால மரத்தின்கீழ் வீற்றிருந்த சிவபெருமானுடைய புதல்வனே! பெரிய மலையாகிய இமையவரையின் மகளான பார்வதியின் புதல்வனே! ஐவருள் ஒருவன் அம்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறமர்செல்வ! ஆல்கெழு கடவுட் புதல்வ! மால்வரை மலைமகள் மகனே!" (254--257) இதனால் மேலே காட்டிய வரலாற்றைக் காணலாம். |