பக்கம் எண் :

38பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

உலகிலே பழமையான குளிர்ந்த கடல்நீர் கலங்கும்படி, உள்ளே நுழைந்துபோய், அசுரர்களின் தலைவனாகிய சூரபத்மனைக்கொன்ற ஒளிபொருந்திய வேல், இலைவடிவான நீண்டவேல்.

பார்முதிர் பனிக்கடல் கலங்க, உள்புக்குச்,
சூர்முதல் தடிந்த சுடர்இலை நெடுவேல்

இது சுப்ரமண்யர் சூரபதுமனைக் கொன்ற வரலாற்றைக் குறிப்பது.             45-4

"அசுரர்களின் நல்ல வெற்றி அழிந்து போகும்படி, தொங்குகின்ற பூங்கொத்துகளை உடைய மாமரத்தை அடியோடு சாய்த்த, குற்றமற்ற வெற்றியையும், கிடைத்தற்கரிய நல்ல புகழையும், கொண்ட சிவந்த வேலையுடைய முருகன்.

அவுணர் நல்வலம் அடங்கக், கவிழ்இணர்
மாமுதல் தடிந்த, மறுஇல் கொற்றத்து
எய்யாநல் இசைச்செவ்வேல் சேஎய்"

(59--61)

ஒரு அசுரன் மாமரவடிவாய் மறைந்து நின்றான். அவன் தேவர்களின் பலத்திலே பாதியைக் கவர்ந்து கொண்டிருந்தான்; அந்த மாமரத்தை முருகன் தனது வேற்படையால் அடியோடு வீழ்த்தினான் என்ற புராண வரலாற்றை இதனால் காணலாம்.

சூரனுடைய சுற்றத்தாரை அடியோடு தொலைத்த பேராற்றல் உடையவனே! போரிலே சிறந்த வீரனே!

சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி
போர்மிகு பொருந!

இது முருகன் அசுரர் குலத்தை அழித்த செய்தியைக் குறிக்கின்றது.