பக்கம் எண் :

திருமுருகாற்றுப்படை39

"கிரவுஞ்சமென்னும் மலையை அழித்தவனே! அழியாத வெற்றியை உடையவனே! உயர்ந்த மலைகளை உடைய குறிஞ்சி நிலத்தின் தலைவனே!

குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ!"

(266--267)

இது முருகன் கிரவுஞ்ச மலையைத் தன் வேலால் வீழ்த்திய வரலாற்றைக் குறிப்பிடுகின்றது.

"குறவர் குலத்திலே பிறந்த அழகிய பெண்-கொடி போன்ற இடையினள்-இளமைப் பருவமுடையவள்-ஆகிய வள்ளியுடன் மகிழ்ந்திருக்கும் ஒருமுகம்.

ஒரு முகம்
குறவர், மடமகள், கொடிபோல் நுசுப்பின்
மடவரல், வள்ளியொடு நகை அமர்ந்தன்றே"

(100--102)

இது முருகன் வள்ளியை மணந்தான் என்பதைக் குறித்தது.

"மங்கையர் கணவ!"                          (264)

வள்ளி தெய்வானை என்னும் மங்கையர்களின் கணவனே!"

இது முருகனுக்கு வள்ளி, தெய்வானை என்ற இரு மனைவியர்கள் உண்டு என்பதைக் காட்டும்.

இவைகளால் முருகனைப் பற்றிய புராண வரலாறுகளைக் காணலாம்.

"கண்ணுதல் கல்லாலின் கீழே அமர்ந்து சனகாதியோகியர்க்கு ஞானோபதேசம் செய்தார். அவர் திரிபுரத்தை எரித்தார்.

இந்திரன் கௌதமர் சாபத்தினால் ஆயிரம் கண்களைப் பெற்றான். அவன் நூறு யாகங்களைச் செய்து இந்திர பதவி பெற்றான்"