பக்கம் எண் :

42பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

"அந்தணர்க்குரிய அறுவகைத் தொழில்களையும் தவறாமல் செய்பவர்கள்; தாய் மரபும் சிறந்தது, தந்தை மரபும் சிறந்தது என்று புகழ்ந்து பேசக்கூடிய குடியிலே பிறந்தவர்கள்; பல்வேறு வகையான பழமையான குடியிலே பிறந்தவர்கள்; நாற்பத்தெட்டாண்டு பிரமச்சரிய விரதம் காத்தவர்கள்; எப்பொழுதும் நல்லறங்களைப் பிறர்க்குரைத்துத் தாமும் அவ்வறங்களைப் பின்பற்றுகிறவர்கள்; முத்தீ வளர்த்துத் தமது நித்திய கடன்களைச் செய்பவர்கள்; இரு பிறப்பாளர் என்னும் அந்தணர்கள்; கடவுளை வழிபடும் காலமறிந்து தோத்திரம் செய்பவர்கள்; ஒன்பது நூல்களைக் கொண்ட முப்புரி நூலணிந்தவர்கள்; ஈர ஆடையை உடுத்தியவர்கள்; உச்சியிலே வைத்துக் கூப்பிய கையை உடையவர்கள்; முருகனைப் புகழ்ந்து - ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்து-நறுமலரால் அவனை வணங்குகின்றனர். இவர்களுடைய வழிபாட்டை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு முருகன் ஏரகத்திலே எழுந்தருளியிருக்கின்றான்.

இரு மூன்று எய்திய இயல்பினின் வழா அது,
இருவர்ச் சுட்டிய, பல்வேறு தொல்குடி,
அறுநான்கு இரட்டி, இளமை நல்லியாண்டு
ஆறினில் கழிப்பிய. அறன் நவில் கொள்கை
மூன்றுவகை குறித்த முத்தீச் செல்வத்து
இரு பிறப்பாளர், பொழுதறிந்து நுவல,
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்,
புலராக் காழகம் புலர உடீஇ,
உச்சிக்கூப்பிய கையினர், தற்புகழ்ந்து
ஆறெழுத்தடக்கிய அருமறைக் கேள்வி
நாவியன் மருங்கின் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிது வந்து,
ஏரகத்துறை தலும் உரியன்"                  (177--189)