தமிழ் நாட்டில் வாழ்ந்த அந்தணர்களைப் பற்றி இதனாற் காணலாம். அவர்கள் வேத மோதி, வேள்வி செய்து, கடவுளை வழிபட்டனர் என்பதையும் இவ்வடிகள் விளக்குகின்றன. தெய்வ நம்பிக்கை பண்டைத் தமிழர்களிலே பெரும்பாலோர் தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள்; அறிவு நிரம்பிய புலவர்களும், பெரியோர்களும் தெய்வங்களை வணங்கி வந்தனர். பொதுமக்களும் தெய்வங்களைப் போற்றி வழிபட்டு வந்தனர். தெய்வ வழிபாட்டால், எண்ணிய காரியங்களிலே எளிதில் வெற்றி பெறலாம் என்று நம்பினர். வேண்டுவார் வேண்டியனவற்றை அளிக்கும் ஆற்றல், தெய்வத்திற்கு உண்டு என்று உறுதியாக எண்ணினர். துன்புற்றவர்களின் துயரங்களைப் போக்கும் அவர்களை இன்புற்று வாழச் செய்யும் இத்தகைய ஆற்றலும் அருளும் உடையது தெய்வம் என்று நம்பினர். இந்நம்பிக்கை பண்டைத் தமிழரிடம் இயற்கையாகவே குடிபுகுந்தது. இவ்வுண்மையைத் திருமுருகாற்றுப்படையிலே காணலாம். வானத்தை முட்டிய உயர்ந்த மலைகள் அமைந்த குறிஞ்சி நிலத்தின் தலைவனே! பலரும் புகழ்வதற்குரிய சிறந்த மொழிகளைக் கூறும் புலவர்களின் தலைவனே! மிகச் சிறந்த பெருமையும் உயர்ந்த பெயருமுடைய முருகனே! விரும்புவோர்க்கு வேண்டியவற்றை யளிக்கும் புகழும் பெயரும் உடையவனே! |