பக்கம் எண் :

44பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

வருந்துவோர்க்கு வேண்டுவன கொடுக்கும் பொன்னா பரணங்களைப் பூண்ட செந்நிறமுடையவனே!

விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக்கிழவ!
பலர்புகழ்நன்மொழிப் புலவர் ஏறே!
அரும்பெறல் மரபின் பெரும் பெயர்முருக!
நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபேராள!
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்!

இதனால் தமிழர்கள் கொண்டிருந்த தெய்வ நம்பிக்கையைக் காணலாம்.

நூலின் சிறப்பு

சங்க காலத்திலே தமிழ் நாட்டிலே வணங்கப்பட்டு வந்த தெய்வங்கள் இவையிவை என்பதை இந்நூலால் அறியலாம்.

தெய்வங்களைப் பற்றிய வரலாறுகளையும், அவ்வரலாறு கூறும் நூல்களையும் தமிழ் மக்கள் அறிந்திருந்தனர்.

தமிழ்நாட்டிலே அந்தணர் முதலிய பல வகுப்பினர் இருந்தனர்.

தமிழர்கள் தெய்வங்களுக்குப் பலியிட்டு வணங்கினர்.

தமிழ்நாட்டில் வேதங்கள் ஓதப்பட்டன; வேள்விகள் நடைபெற்றன

தமிழ் மக்கள் தெய்வங்களுக்குத் திருவிழாக்கள் செய்து கொண்டாடினர்.

தமிழ்நாட்டில் உருவ வணக்கமும் இருந்தது; அருவ வணக்கமும் இருந்தது.