| 48 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
தன் முதுகில் தூக்கிக்கொண்டு வந்தது. அவனையே கரிகாலன் என்று அழைத்தனர். அரியணையேற்றி அரசனாக்கினர். யானையின் வழியே வந்தவன் ஆதலால் கரிகாலன் என்ற பெயர் பெற்றான் என்று கூறுவர். கரி-யானை. இவன் இமயம் வரையிலும் படையெடுத்துச் சென்றவன். இடைவழியிலே தன்னை எதிர்த்த எல்லா அரசர்களையும் வென்றவன். இமயத்திலே புலிமுத்திரை பொறித்துத் தன் புகழை நிலைநாட்டியவன். பாட்டின் அமைப்பு பொருநன் ஒருவன். அவன் வறுமைப் பிணியால் வாடி உள்ளமும் உடலும் சோர்ந்தான். தன் மனைவியாகிய பாடினியுடன் வள்ளல்கள் வாழும் இடம் தேடிப் புறப்பட்டான்; வழிநடந்தான். வழிநடந்து வழிநடந்து அவனும் இளைத்தான்; அவன் மனைவியும் சோர்ந்தாள். இருவரும் ஒரு மரநிழலிலே இளைப்பாறத் தங்கினர். வழிநடந்த களைப்புதீரப்பாடினி தன் யாழை வாசித்து இனிய கானம் பொழிந்தாள். இச்சமயத்தில் கரிகாற்சோழனிடம் பரிசுபெற்று வந்த பொருநன் ஒருவன் அவர்களைக் கண்டான்; அவர்களை அணுகினான்; அவர்களை வறுமை தீர்ந்து தன்னைப்போல் வாழ்வடைய வழி கூறினான். ‘‘பொருநனே, நானும் உன்னைப்போல வறுமையால் வாடினேன். கரிகாற்சோழனிடம் போனேன். அவனைப் புகழ்ந்து பாடினேன்; அவன் என்னை அன்புடன் வரவேற்றான்; புத்தாடையளித்தான்; வழிநடைவருத்தந் தீர இனிய பானம் தந்தான்; நன்றாய் உறங்குவதற்கும் ஓய்வு பெறுவதற்கும் இடம் கொடுத்தான். நல்ல கொழுப்பும் இனிமையுமுள்ள விருந்தளித்தான். இவ்வாறு என்னையும், என்னுடன் |