சேர்ந்தவர்களையும் பலநாட்கள் எக் கவலைக்கும் இடமின்றி உபசரித்தான். இறுதியில் அவனிடம் விடைபெற்று வீடு திரும்பினோம். அப்பொழுது களிறுகளையும், பிடிகளையும், கன்றுகளுடன் பரிசளித்தான். வறுமை நோய் எங்களை எக்காலத்திலும் எட்டிப் பிடிக்காதபடி ஏராளமான ஊர்திகளை உதவினான். ஆடைகள் அணிகலன்கள் அனைத்தும் அளித்தான். பொருநனே! நீயும் உன் சுற்றத்துடன் அந்தக் கரிகாலனிடம் போ. அவனைப் புகழ்ந்துபாடு. உன் குறைதீர உனக்குப் பரிசளிப்பான். நீயும் வறியோர்க்குப் பரிசு வழங்கும் அளவுக்கு உனக்கு எண்ணற்ற செல்வங்களையும், நிலங்களையும் வழங்குவான். இவ்வாறு கரிகாலனிடம் பரிசுபெற்று வந்த பொருநன் கூறினான். பரிசுபெறாத பொருநனுக்கு வறுமை நீங்க வழிகாட்டினான். காவிரிப்பூம்பட்டினத்திற்குப் போகும் படியான வழிகளைச் சொல்லி இவனை அனுப்பி வைத்தான். இந்த முறையிலேயே இப்பாடல் அமைந்திருக்கிறது. ஒரு பொருநன் மற்றொரு பொருநனுக்குக் கரிகாற் சோழனுடைய பெருமையை எடுத்துச் சொல்லுவதுபோல் இயற்றப்பட்டதே இப்பாடல். இதுவே பொருநர் ஆற்றுப்படையின் போக்கு. பரிசிலர் பண்டைக்காலத்தில் பொருநர்கள் பரிசுபெற வள்ளல்களைத் தேடிச் செல்லும்போது தாங்கள் மட்டும் தனித்துப் போவதில்லை. தங்கள் மனைவி மக்களையும் உடன் கூட்டிச் செல்வர். பொருநர்களின் மனைவிமார்களும் யாழ்வாசிப்பதிலும், |