பக்கம் எண் :

பொருநர் ஆற்றுப்படை51

இசையின் சிறப்பு

கரிகாற்சோழன் காலத்திலே தமிழ் நாட்டிலே இசைக்கலை மிகவும் உயர்ந்த நிலையிலிருந்தது. இசைக்கலைக்கேற்ற கருவிகளும் இருந்தன. அக்கருவிகளைச் செய்யும் திறமையும் பெற்றிருந்தனர்.

இசைக் கலையில் மயங்காதார் எவரும் இல்லை. பாடினியின் பாட்டிற்குத் தகுந்தவாறு, யானையும் நடைபோடும் என்பதை மேலே கண்டோம். வழிப்பறி செய்யும் கள்வர்கள்கூட கானத்தைக் காதிலே கேட்பார்களாயின் தங்கள் செயலை மறப்பார்களாம். இசையிலே மனத்தைப் பறிகொடுத்து மகிழ்வார்களாம்.

"மணமகளை அலங்கரித்தது போன்ற பாலையாழ்; யாழுக்குரிய தெய்வம் தன்னிடத்திலேயிருக்கின்ற எல்லா இலக்கணங்களும் அமைந்த தோற்றத்தையுடைய பாலையாழ்; இத்தகைய பாலையாழின் ஓசையைக் கேட்டவுடன் வழிப்பறி செய்யும் கள்வர்களும் தங்கள் ஆயுதத்தைக் கைவிடுவார்கள்; அவர்கள் இரக்கமற்ற உள்ளத்திலே இரக்கத்தை உண்டாக்கும்; அவர்கள் செய்கையிலே மாறுதலை உண்டாக்கும். இத்தகைய குற்றமற்ற பாலையாழ்" என்று பாலை யாழைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது.

மணங்கமழ் மாதரை மண்ணி அன்ன,
அணங்கு மெய்ந்நின்ற அமைவருகாட்சி,
ஆறலைக் கள்வர் படைவிட அருளின்
மாறுதலைப் பெயர்க்கும் மருவின் பாலை;            (19--22)

இவ்வடிகள் யாழின் பெருமையையும், அதில் பிறக்கும் இசையின் உயர்வையும் எடுத்துக்காட்டுகின்றன.