| 52 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
இசை மக்கள் மனத்தை மாற்ற வல்லது; அதனால் நன்மை பல உண்டு. இசை, கெட்டவர்களை நல்லவர்களாக மாற்றும்; கல்நெஞ்சினரைக் கனியும் நெஞ்சினராக்கும். இசையின் மூலம் மக்களுக்குப் பல நன்னெறிகளைப் போதிக்கலாம்; இவ்வாறு நம்பினர் பண்டைத்தமிழ் மக்கள். இவ்வுண்மையை நமக்குப் பொருநர் ஆற்றுப்படை ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார். நெசவுத் தொழில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டில் நெசவுத்தொழில் சிறந்திருந்தது. தமிழர்கள் பருத்தி நூல் நெசவிலும், பட்டு நூல் நெசவிலும் தலைசிறந்திருந்தனர். இவ்வுண்மையைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் காணலாம். இப்பொருநர் ஆற்றுப்படையும் நெசவுத்தொழிலின் சிறப்பை நமக்கு எடுத்துக் கூறுகின்றது. "கண்ணால் காணமுடியாத அவ்வளவு மெல்லிய நூலால் நெய்யப்பட்டது; அழகான பூவேலைகள் செய்யப்பட்டது; பாம்பின் தோலைப் போல அவ்வளவு மென்மையும், வழவழப்பும், பளபளப்பும் அமைந்தது; இத்தகைய மெல்லிய துணி" என்று அக்காலத்தில் நெய்யப்பட்ட துணியைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. நோக்குநுழைகல்லா நுண்மைய, பூக்கனிந்து அரவுரியன்ன அறுவை. (82--83) என்ற அடிகளால் இதனைக் காணலாம். துணிக்கு அறுவை என்று பெயர். அறுவை-அறுக்கப்படுவது. நீளமாக நெய்து துண்டாக்கப்படுவது. துணி-துணிக்கப்படுவது. அதாவது துண்டாக்கப்படுவது. அக்காலத்துத் தமிழர்கள் அழகிய பட்டாடைகள் நெய்தனர். பணம் படைத்தவர்கள் பட்டாடைகள் அணிந்தனர். |