பக்கம் எண் :

பொருநர் ஆற்றுப்படை53

பளிச்சென்று தெரியும் கரை போட்ட பட்டாடைகளைத் தரித்துக் கொள்வதிலே அவர்களுக்கு ஆவலுண்டு. ஆதலால் கண்கவரும் வனப்புடைய கரைபோட்ட ஆடைகளை நெய்வதிலே தமிழர்கள் தேர்ந்திருந்தனர்.

"கொட்டைக் கரைய பட்டுடை நல்கி                (155)

கொட்டைக் கரை போட்ட பட்டாடை கொடுத்து" என்ற அடியினால் இதனை அறியலாம். மெல்லிய நூல் நூற்றலும், அழகிய கரை போட்ட ஆடைகளை நெய்வதும், தமிழர்களின் சிறந்த கலைகளாயிருந்தன.

வறியோர்

பண்டைத் தமிழகத்திலே செல்வம் செழித்திருந்தது. இயற்கை வளங்கள் ஏராளமாக நிரம்பியிருந்தன; கலைகள் வளர்ச்சியடைந்திருந்தன; வள்ளல்கள் பலர் வாழ்ந்திருந்தனர்; அவர்கள் கலைகளின் வளர்ச்சிக்கும், கல்விப் பெருக்கத்திற்கும் ஊன்று கோலாயிருந்தனர். சங்க இலக்கியங்களிலே இந்த உண்மைகளைக் காணுகின்றோம்.

ஆனால் வறியோர் பலர் வாழ்ந்து வந்தனர்; கலைஞர்களும், கவிஞர்களுங்கூட வறுமைக் கனலால் வாடி வதங்கினர் என்றால் மற்றவர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? இவர்கள் நிலமும், செல்வமும் படைத்த வள்ளல்களின் ஆதரவு பெற்றுத்தான் வாழவேண்டிய நிலையிலிருந்தனர். உயர்ந்த ஆடைகள் நெய்த அக்காலத்தில் உடையில்லாமல் வருந்தினோர் பலர்; உறைவதற்கு ஏற்ற இடமில்லாமல் ஊரூராக இடந்தேடி அலைந்தோர் பலர்; உணவுக்காகச் செல்வம் படைத்தவர்களிடம் சென்று கையேந்தி நின்றவர்கள் பலர். இத்தகைய ஏழைத்தமிழ்ப் புலவர்களால் இயற்றப்பட்ட பல பாடல்கள்தாம் இன்று நமக்கு இலக்கியச் செல்வங்களாக இருக்கின்றன.