| 54 | பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் |
ஏழையரின் கிழிந்த உடையைப் பற்றிப் பொருநர் ஆற்றுப்படையில் எழுதியிருக்கும் சித்திரமே இவ்வுண்மையை நன்றாக விளக்கிக்காட்டும். "ஈரும் பேனும் கூடிக் குடியிருந்து அரசாட்சி செய்வது; வேர்வையால் நனைந்து நாற்றமடிப்பது; வேறு நூல்கள் நுழைந்திருக்கின்ற தையல் போட்ட கிழிந்த கந்தை" என்று வறிஞர்களின் கந்தைத் துணியை வர்ணிக்கின்றார். ஈரும் பேனும் இருந்து இறை கூடி, வேரொடு நனைந்து, வேற்றிழை நுழைந்த துன்னல் சிதார்" (80--82) கந்தையுடையின் படத்தை அப்படியே இவ்வடிகளில் காணுகின்றோம். இவ்வுடைகளை அணிந்த வறிஞர்களையும் நம் கண்முன்னே அப்படியே காட்டுகிறார் முடத்தாமக்கண்ணியார். விருந்து புரத்தல் மதுவிலக்கும் புலால் மறுத்தலும் பண்டைத் தமிழகத்தில் இல்லை. சங்க இலக்கியங்களில் இவை இரண்டும் மணம் வீசிக்கொண்டு கிடப்பதைக் காணலாம். பழந்தமிழர் மதுவையும், மாமிசத்தையும் சிறந்த உணவாகக் கொண்டனர். வசதி படைத்தவர்கள், தம்மிடம் வந்த விருந்தினர்க்கு முதலில் மதுபானம் கொடுத்து மகிழச் செய்வர். மதுவுண்டு களைப்பாறிய பின்னரே நல்ல மாமிசங்களோடு கூடிய விருந்தளிப்பர். இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழர் வழக்கம். "நல்ல நகைகளை அணிந்த மகளிர்; இனிமை தரும் புன்சிரிப்புடன் விளங்கும் மகளிர்; ஒளிகெடாத பொற்கிண்ணத்தில் பல தடவை மதுவை நிரம்ப ஊற்றித் தருவார்கள்; |