பக்கம் எண் :

பொருநர் ஆற்றுப்படை57

விருந்தினர்க்கும் இட்டு மகிழ்ந்தனர். பண்டைத் தமிழர்களின் விருந்தோம்பும் பண்பாட்டையும் இவைகளின் மூலம் காணலாம்.

காக்கைக்குச் சோறு

உண்பதற்கு முன் காக்கைக்குச் சோறிடுவது தமிழரின் பண்டை வழக்கம். இன்றும் இவ்வழக்கத்தைப் பின்பற்றும் தமிழர் பலர் உண்டு. விரத நாட்களில் காக்கைக்குச் சோறிட்ட பிறகுதான் சாப்பிடுவது என்ற வழக்கத்தைப் பலர் பின்பற்றி வருகின்றனர். தமிழர்கள் இவ்வழக்கத்தைப் பின்பற்றியதற்கு நல்லதோர் காரணம் உண்டென்று கூறுவர். தாம் உண்ணப்போகும் உணவில் ஏதேனும் நஞ்சு கலந்திருக்கிறதா என்று ஆராய்வதற்காகவே இப்பழக்கம் கையாளப்பட்டதாகச் சொல்லுகின்றனர்.

உயரமற்ற தென்னை மரங்கள் நிறைந்திருக்கின்ற குளிர்ந்த சோலை; அந்தத் தென்னந்தோப்பின் வாசலில் நெற்குதிர் நிற்கின்ற குடிசை; அந்தக் குடிசையிலே குடியிருப்போர் இரத்தம் கலந்த சோற்றைக் காக்கைக்குப் பலியாகக் கொடுத்தனர். அந்தப் பலியைக் கருங்காக்கைகள் உண்டன.

தாழ் தாழைத் தண் தண்டலைக்
கூடு கெழீஇய குடி வயினால்,
செஞ்சோற்ற பலி மாந்திய
கருங்காக்கை                              (181--184)

இவ்வடிகள் தமிழரின் பழைய வழக்கம் ஒன்றை எடுத்துக்காட்டுகின்றன.