ஆட்சியைப் பற்றியும், ஆண்மையைப் பற்றியும் இந்நூலாசிரியர் பாராட்டுகிறார். ஒரு குடையான் ஒன்று கூறப் பெரிதாண்ட பெருங் கேண்மை, அறனொடு புணர்ந்த திறன் அறிசெங்கோல், அன்னோன் வாழி, வெல்வேற் குரிசில் (228--231) இதுவே அந்தப் பாராட்டுரை. இவன் நடு நிலைமை தவறாமல் நீதி வழங்குவோன் என்பதற்கு உதாரணமாக இவன் வரலாற்றுக் குறிப்பொன்றை இந்நூல் சுட்டிக்காட்டுகின்றது. முதியோர் இருவர்க்குள் முரண்பாடு ஏற்பட்டது. அவர்கள் தங்கள் முரண்பாட்டைப் பேசித் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. கரிகாலனிடம் வழக்குரைத்து நீதி பெறலாம் என்று நினைத்து அவனிடம் அணுகினர். அவன் இளைஞனாய் இருப்பதைக் கண்டனர். அவனால் தங்கள் வழக்கை ஆராய்ந்து உண்மை உரைக்க முடியுமோ என்று ஐயுற்றனர். அவர்கள் ஐயத்தைக் குறிப்பால் அறிந்தான் கரிகாலன். அவர்களுடைய வழக்கை மற்றொரு வயது முதிர்ந்த அறநூல் அறிந்தவரிடம் மாற்றுவதாகக் கூறினான். பின்னர் தானே முதியவனைப் போல நரைமுடியும் தாடியும் உடையவனாய் வந்து உட்கார்ந்து அவர்கள் வழக்கைப் கேட்டான். இருவரும் ஒப்புக்கொள்ளும்படி நீதி வழங்கினான். இந்த நிகழ்ச்சியை "முதியோர், அவை புகுபொழுதில்தம் பகைமுரண் செலவும்" (188) என்ற அடியினால் குறிப்பிடுகிறது இந்நூல். இதனால் பண்டைத் தமிழ் மன்னர்களின் நீதியையும் நேர்மையையும் காணலாம். |