பக்கம் எண் :

64பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

நடனம், பல்வகை வாத்தியங்களை வாசித்தல் போன்ற கலைகளிலே கைதேர்ந்தவர்கள். இவர்கள் அரசர்கள், சிற்றரசர்கள், நிலத்தலைவர்களின் குடும்ப நண்பர்கள்; கணவனுக்கும், மனைவிக்கும் ஊடல் உண்டான சமயங்களில், அவர்களுக்கிடையிலே தூதர்களாய் நின்று சமாதானம் செய்து வைப்பார்கள்.

பண்டைத் தமிழகத்தில் விலைமாதர், கணிகையர், வரைவின் மகளிர் (மணம் செய்துகொள்ளாத பெண்கள்) என்று வழங்கும் வேசையர்கள் இருந்தனர். இவர்கள் விபசாரத்தையே தொழிலாகக் கொண்டவர்கள். இவர்கள் மேற்கூறிய கலைஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்த பெண்களாக இருக்கலாம் என்று எண்ண இடமுண்டு.

பாண் ஆற்றுப்படைகள்

பத்துப்பாட்டுள் இரண்டு பாணாற்றுப் படைகள் இருக்கின்றன; ஒன்று சிறுபாண் ஆற்றுப்படை; மற்றொன்று பெரும்பாண் ஆற்றுப்படை. ஒன்று அளவிலே சிறியது. குறைந்த அடிகளை உடையது; அதனால் சிறுபாண் ஆற்றுப்படை என்று பெயர்பெற்றது. மற்றொன்று அளவிலே பெரியது; நிறைந்த அடிகளை உடையது; ஆதலால் பெரும்பாணாற்றுப்படை என்று பெயர் பெற்றது.

சிறிய யாழை வாசிப்போர் சிறுபாணர்; பெரியயாழை வாசிப்போர் பெரும்பாணர். சிறுபாணரை ஆற்றுப்படுத்தியது சிறுபாண் ஆற்றுப்படை; பெரிய பாணரை ஆற்றுப்படுத்தியது பெரும்பாண் ஆற்றுப்படை என்றும் கூறலாம். இதற்கும் ஆதரவு உண்டு.

ஆசிரியர்

இந்தச் சிறுபாண் ஆற்றுப்படையின் ஆசிரியர் நத்தத்தனார். இவர் நல்லூர் என்னும் ஊரிலே பிறந்தவர்;