பக்கம் எண் :

சிறுபாணாற்றுப்படை 65

அல்லது வாழ்ந்தவர். நல்லூர் என்பது இடைகழி நாட்டிலே உள்ள ஓர் ஊர். இடைகழி நாடு என்பது சென்னைக்குத் தென்மேற்கில் உள்ளது. உப்பங்கழிகளுக்கு இடையில் உள்ள நாடு இடைகழிநாடு. இது தொண்டைநாட்டின் ஒரு பகுதி. "இடைகழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்" என்று இப்புலவர் பெயர் நீளமாக வழங்கப்படுகின்றது. இப்பெயரைக் கொண்டே இவர் வரலாற்றை ஊகிக்க முடிகின்றது.

பாட்டின் தலைவன்

இந்நூல் ஒய்மானாட்டு நல்லியக்கோடன் என்பவன் மேல் பாடப்பட்டது. இவன் கடையெழு வள்ளல்களுக்குப் பிற்காலத்தில் இருந்தவன். அவர்களைப் போன்ற சிறந்த கொடையாளி. ஓவியர் குடியிலே பிறந்தவன்.

ஒய்மான் நாடு திண்டிவனத்தை உள்ளிட்ட - தொண்டைநாட்டின் ஒரு பகுதியாக வேண்டும் என்று எண்ணுகின்றனர். அவனுடைய ஆட்சிக்குள் மாவிலங்கை, எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் என்ற நகரங்கள் அடங்கியிருந்தன. மாவிலங்கை இவனது தலைநகரம். நல்லியக்கோடன், ஒய்மான் நல்லியக்கோடன் என்றும் இவன் பெயர் வழங்கும்.

சேரநாட்டின் செல்வம்; பாண்டியநாட்டின் பெருமை; சோழநாட்டின் செழிப்பு; கடையெழு வள்ளல்களின் வரலாறு, நல்லியக்கோடன் ஆண்மை; கொடை ஆகியவைகளை இந்நூலிலே பார்க்கலாம். தமிழ்நாட்டின் வளத்தையும், தமிழர்களின் சிறப்பையும், நாகரிகத்தையும் இந்நூலிலே நன்கு காணலாம்.

பாட்டின் அமைப்பு

நல்லியக் கோடனிடம் பரிசு பெற்ற பாணன் ஒருவன் பாலைநிலத்தின் வழியே வந்துகொண்டிருந்தான்.