பக்கம் எண் :

66பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்

வரும் வழியிலே மற்றொரு பாணனைப் பார்த்தான். அவன் பரிசு தரும் வள்ளலைத்தேடி வழிநடந்து வந்தான். அவனுடன் அவன் மனைவி மக்களும் வந்தனர். அவர்கள் வழிநடை வருத்தம் தீர ஒரு மரநிழலிலே தங்கியிருந்தனர். பரிசு பெற்றுவந்த பாணன் பரிசு தேடிவந்த பாணனை நெருங்கினான். அவனும் தன்னைப்போல வறுமையின்றி வாழவேண்டும் என்று எண்ணினான். அவனுக்கு நல்லியக்கோடனுடைய நற்பண்புகளையெல்லாம் நவின்றான்.

"நல்லியக் கோடனுடைய நாடு சேரநாட்டைக் காட்டினும் செல்வம் நிறைந்தது; பாண்டிய நாட்டைக் காட்டிலும் பலவகை வளங்கள் கொழிப்பது; அவன் ஆளுகைக்குட்பட்ட நகரங்களும் செல்வத்திலே சிறந்து நிற்பவை; அந்நகரங்களிலே வாழ்வோரும் விருந்தினரை விரும்பிப் போற்றுவார்கள்; நல்லியக்கோடன் கடையெழு வள்ளல்களைப் போன்ற கொடையாளி; அவனிடம் போய் அவனைப் புகழ்ந்து பாடுவாயானால் உன் வறுமை தீரச் செல்வங்களை வாரி வாரி வழங்குவான்". இவ்வாறு பரிசில் பெற்ற பாணண், பரிசில் பெறாத பாணணிடம் கூறினான்.

நல்லியக்கோடன் வீற்றிருக்கும் தலைநகரை அடைவதற்கான வழியையும் சொன்னான். இந்த முறையில் இப்பாடல் அமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்நூலைப் பாடிய புலவர் நத்தத்தனார் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் சுற்றித்திரிந்தவராக இருக்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழகத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறார் இவ்வாசிரியர். இந்நூலைப் படிப்போர் இவ்வுண்மையை ஒப்புக் கொள்வார்கள்.