பக்கம் எண் :

சிறுபாணாற்றுப்படை 67

சேரநாட்டின் சிறப்பு

இந்நூல் தோன்றிய காலத்திலே சேரநாடு செல்வம் கொழிக்கும் சிறந்த நாடாக இருந்தது. அந்த நாட்டின் இயற்கை வளத்தை எடுத்துக்காட்டுவதன் மூலம் இவ்வுண்மையை விளக்குகிறார் இவ்வாசிரியர்.

"பெரிய வாயையுடைய எருமை, கொழுத்த மீன்கள் காலடியிலேபட்டு நசுங்கும்படி வயலிலே இறங்கி நடந்தது; செழித்த இதழ்களையுடைய செங்கழுநீர் மலர்களை மேய்ந்து; பின்னர் அசைப்போட்டுக் கொண்டு கரையேறிற்று;

பசுமையான மிளகுக் கொடிகள் படர்ந்திருக்கின்ற ஒரு பலாமரத்தின் நிழலை அடைந்தது; அங்கே முளைத்திருக்கின்ற மஞ்சளின் மெல்லிய இலைகள் மயிர்நிறைந்த அந்த எருமையின் முதுகைத் தடவிக்கொடுத்தன.

அந்த எருமையும் முதிர்ச்சியடையாத புதிய தேன்மணம் கமழும் அந்தச் செங்கழுநீர் மலர்களை மென்று கொண்டே அசைந்து காட்டுமல்லிகைகள் நிறைந்த படுக்கையிலே படுத்துக்கொண்டது."

இவ்வாறு ஓர் எருமையின் செயலை எடுத்துக்காட்டுவதன் வாயிலாகச் சேர நாட்டின் நீர் வளத்தையும், நில வளத்தையும் விளக்கிக் காட்டுகின்றார். எருமை போன்ற விலங்குகளே இவ்வளவு மகிழ்ச்சியுடன் வாழும்போது அந்நாட்டிலே நிலைத்து வாழும் மக்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.

கொழுமீன் குறைய ஒதுங்கி, வள்இதழ்க்
கழுநீர் மேய்ந்த கயவாய் எருமை,
பைங்கறி நிவந்த பலவின் நீழல்,
மஞ்சள் மெல் இலை மயிர்ப்புறம்தைவர.