பெயரும் முச்சங்க வரலாற்றில் காணப்படவில்லை. ஆதலால் இது சங்கநூல் அன்று எனத் தீர்மானித்துவிட முடியாது. நூலின் அமைப்பு, அதன் செய்யுள்நடை, நூலாசிரியர் காலம், நூலில் காணும் செய்திகள் இவைகளைக் கொண்டே ஒரு நூலின் காலத்தைக் கணக்கிட வேண்டும். இவ்வாறு கணக்கிட்டே பத்துப்பாட்டைச் சங்ககால இலக்கியம் என்று தீர்மானித்திருக்கின்றனர். பத்துப்பாட்டைப் பாடிய புலவர்கள் கடைச்சங்க காலப் புலவர்கள்; அக்காலத்திலே ஆசிரியப்பாவில்தான் பெரும்பாலும் நூல்கள் செய்யப்பட்டன; அதில் கூறப்படும் செய்திகளும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழகத்துச் செய்திகள்; ஆகையால் பத்துப்பாட்டு கடைச்சங்ககால நூல் என்பதிலே ஐயம் இல்லை. கடைச்சங்க காலத்தை ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் என்பர். பத்துப்பாட்டும் எட்டுத்தொகை நூல்களும் சங்க நூல்கள் என்பதில் ஆருக்கும் ஐயம் இல்லை. எட்டுத்தொகை நூல்களின் பெயர்கள் கடைச்சங்கத்தைப் பற்றிய குறிப்பிலே காணப்படுகின்றன. பத்துப்பாட்டும் பண்டைத்தமிழரும் என்னும் இந்நூல் பத்துப்பாட்டைப் பற்றிக் கூறுவதாகும். பத்துப்பாட்டுக் காலத்தில் தமிழ்நாடு இருந்த நிலைமை; தமிழர்களின் வாழ்க்கை நிலைமை; அரசியல் நிலைமை; சமுதாய நிலைமை; பழக்கவழக்கங்கள்; சிறந்த பண்புகள்; ஆகியவைகளை எடுத்துக்காட்டுவதே இந்நூலின் நோக்கம். பண்டைத் தமிழர்களைப் பற்றி இன்று யார் யாரோ என்ன என்னவோ பேசியும் எழுதியும் வருகின்றனர். தமிழர் நாகரிகத்தைப் பற்றிக் கூட்டியும் குறைத்தும் கூறுகின்றனர் சிலர். இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுவதில் உள்ள உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் பழந்தமிழ் நூல்களைப் பார்த்தாக வேண்டும். தமிழர்களின் உண்மைப் பண்பாட்டை உணர இவைகளைத் தவிர வேறு சரியான சான்றுகள் இல்லை. |